அதேபோல் பெருமாள் திருமங்கைக்கு வேண்டியவர். அர்ச்சாவதாரம் வேண்டிய பொருள். அதை தரிசிக்க வரும்போது கதவடைத்துக் கொண்டால் உம்மழகை நீரே ரசித்து வாழ்ந்துபோம் என்று ஆழ்வார் சொல்ல மாட்டாரா என்ன? இத்தலத்திற்கு அமைந்த 10 பாடல்களும் திருமங்கை ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் நடந்த விவாதமாகவே கூறுவர். மிகவும் இனிமையான உள்ளுறை பொருந்திய பாடல்களாகும் அவை, திருமங்கைக்கும் பரிமள ரெங்கனுக்கும் நடந்த உரையாடல் நாம் வாழும்போது, நாம் உமதடிமை என்று தெரிந்திருந்தும் எமக்கு காட்சி கொடுக்காது தாழிட்டுக் கொண்டீரல்லவா பெருமாளே, இது நம்மிருவருக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. திருமங்கை, பரிமள ரங்கனைக் காண ஆசைப்பட்டதற்கு அவன் கதவடைத்துக் கொண்டதுதான் மிச்சம் என்று எல்லோரும் ஏசினால் உமக்கே பழிவந்து சேரும். ஆகவே எமக்கு காட்சி கொடும் என்று திருமங்கை சொல்ல. நமக்குப் பழிவரும் என்று நீர் ஏன் துயரப்படுகிறீர்கள் அதனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலையை விடுங்கள் என்று பெருமாள் கூற, திருமங்கை விடுவதாக இல்லை. பெருமாளே உம்மால் பொறுக்க முடியாதது ஒன்று இப்போது ஏற்பட்டுவிட்டதென்று கூற, ஆழ்வாரே அது என்ன புதிதாக ஒன்றைச் சொல்கிறீர் என்று பரிமளன் வினவ, பெருமாளே ஒரு பொருள் நம்மை விட்டுச் சென்றால் அதை மறந்து மற்றொன்றை நாடுவதே இன்றைய உலகியற்கையாக உள்ளது. ஆனால் யாம் அவ்வாறல்ல, நீவிர் எங்கட்கு புலப்படாது செல்லச் செல்ல உங்கள் மீது யாம் கொண்ட பக்திதான் மேலும் வளரும். நாங்கள் யார் தெரியுமா “மறந்தும் புறந்தொழாமாந்தர்” “இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உற்றோமேயாமாகில் உமக்கே நாம் ஆட் செய்வோம்.” “இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” | |