“எந்தை தந்தை எம்மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்.” “நுந்தம் பணி செய்திருக்கும் நும்மடியோம் நும்மைத் தொழுதோம்.” |
என்று நாங்கள் கொண்ட ஆசையின் காரணமாக உம்மைப் போற்றிப்
புகழ்வதையே இயல்பாகக் கொண்டவர்கள். உம்மைப் பழித்தாலும் பொறுத்துக்
கொள்ளும் இயல்புடைய தாங்கள் உமதடியாரைப் பழித்தால் பொறுமையாக
இருப்பீரோ, அதனால்தான் எமக்கு வந்திருக்கும் இழுக்கு நும்மால் பொறுக்க
முடியாதென்று கூறினோம்
ஆசைவழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியார்கட்கு.....என்றார். |
பெருமாளே நம்மிருவருக்கும் உள்ள உறவு பற்றி தேசம் முழுவதும்
தெரியும்.
“திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்” என்னும்மாப்போலே திருமங்கை. |
திவ்ய தேசங்களினூடே திரிந்து கொண்டிருக்கிறான் என்பது உலகமறிந்த
விஷயமாகும். அப்பேர்ப்பட்ட இந்த அடியவனுக்கு பொன்னின் ஒளியைக்
காட்டிலும் விஞ்சி நிற்பதான உமது வடிவழகைக் காட்டாமல் உள்ளீரே
“தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்” - என்றார் |
திருமங்கையின் விளக்கத்தை மேலும் பருக எண்ணிய பரிமளன் மீண்டும்
மௌனம் சாதிக்க திருமங்கை மீளவும் விட்ட பாடில்லை.
பெருமாளே பரமபதத்தில் நித்திய சூரிகட்கு காட்சி கொடுக்கும் நின்
பேரழகை பூவுலகிற்கும் வழங்குவதற்காக அல்லவா அர்ச்சாவதாரம்
எடுத்துள்ளீர். அவ்வாறன்றோ இந்தளூரிலும் தங்கி இருப்பது. அவ்விதம்
இருக்க இன்னும் வேறுபாடு காட்டலாமோ (வாசி அற என்றால் வேறுபாடு
இன்றி என்பது பொருள்) வாசி அற முகங்கொடுக்கிற இடத்தே, வாசி வையா
நின்றீர் என்று இந்நிகழ்ச்சியை பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யானிப்பார்.