பக்கம் எண் :

185

     ஒரு சமயம் பூலோகத்தில் பராசக்தியின் தந்தையாக இருந்த தட்சன் ஒரு
யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே
பார்வதி சிவனைநோக்கி தட்சனுக்கு புத்திமதி கூறி தங்களை அழைக்கச்
செய்கிறேன் என்று சென்று தட்சனுக்கு புத்திமதிகள் கூற அவன் சிவனை
மேலும் இகழ்ந்து பேசி அனுப்பினான். இதனால் கோபமுற்ற பார்வதி தட்சனை
சபித்து அவன் யாகத்தை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வர, சிவன்
ஏற்றுக்கொள்ள மறுத்து கோபம் அடங்காமல் ருத்ர தாண்டவம் ஆடினார்
என்ற கதை எல்லோருக்கும் தெரியும். சற்றேனும் கோபம் தணியாத சிவன்
இவ்வுலகமே அழியும்படியாக கொடூர நடனத்தில் இந்த உபயகாவேரி
மத்திமத்தில் வந்து ஆடியதாகவும் அப்பொழுது சிவனின் தலையில் உள்ள
சடாமுடித் தரையில் பட்ட உடன் அதில் இருந்து ஒரு சிவன் தோன்றி
கொடூர நடனம் ஆட, இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிவனுடைய தலைமுடி
தரையில் அடிபட அதிலிருந்து ஒவ்வொரு சிவனாக தோன்ற தேவர்களும்,
ரிஷிகளும் பேரழிவு வந்துவிடுமோ என்று எண்ணி உலகை காக்குமாறு
மகாவிஷ்ணுவிடம் வேண்ட பரமபதத்தில் இருந்து மகாவிஷ்ணு புறப்பட்டார்.
இதற்குள் இந்த உபயகாவேரி மத்திமத்தில் 11 சிவன்கள் (சிவரூபங்கள்)
தோன்றி கொடும் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க பரமபதத்திலிருந்து வந்த
எம்பெருமான் இவ்விடத்திற்கு எழுந்தருளினான். நாராயணனை பரமபத
நாதனாக கண்டதும் சிவன் தனது கொடூரமான தாண்டவத்தை நிறுத்தினான்.
என்னைப்போல் தாங்கள் 11 திருமால்களாக காட்சி அளிக்கவேண்டும் என்று
சிவன் வேண்ட பூலோகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளாக உள்ள 10
பெருமாள்களை பரமபதநாதன் நினைத்த மாத்திரத்தில் 10 பெருமாள்களும்
இங்கு எழுந்தருளினர். பேராச்சரியம் உற்ற சிவன் ஏகாதச மூர்த்தியாக காட்சி
தரவேண்டும் என்று விண்ணப்பிக்க, அவ்வண்ணமே செய்வதாக பெருமாள்
அருள்பாலித்தார்.

     11 பெருமாள்கள் நின்ற இடந்தான் உபயகாவேரி மத்திமத்தில்
அமைந்துள்ள இந்த திருநாங்கூர் 11 திருப்பதிகள் ஆகும்.

     இதன்பின் பதினொரு சிவரூபங்களை திருமாலின் அவதார
மூர்த்திகளாகிய பதினொருவரும் அழைத்து ஒரு சிவனுக்குள் ஒரு சிவனாகச்
செலுத்தி பார்வதியையும் ஏற்றுக் கொள்ள வைத்ததாக ஐதீகம்.

     இந்த பதினொரு திவ்ய தேசங்களை சேவித்த வகையில் இங்கு ஒரு
சிவன் கோயில் உள்ளது.