சிறப்புக்கள் 1) செம்பொன் ரங்கர் என்றும் ஹேமரங்கர் என்றும் பேரருளாளன் என்றும் இப்பெருமாளுக்குத் திருநாமங்கள். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன். அதைவிடுத்து இங்குவந்து நம்மோடு இருப்பதால் பேரருளாளன். 2) காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காஸ்யபன் என்னும் அந்தணன் மிக்க வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் வறுமையைப் போக்க எவ்வளவோ முயன்றும் தவம்பல செய்தும் பயனில்லை. பின்னர் பக்தர்களால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அவன் இங்கு வந்து திருமந்திரத்தை 3 தினங்களில் 32000ம் தடவை உச்சரித்து ஜபம் செய்ய பெருமாள் திருவருளால் பெருஞ்செல்வம் பெற்றான் என்பதுமோர் கதையுண்டு. எனவே இழந்த செல்வத்தை பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் எம்பெருமானை சேவிப்பது மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பதில் ஐயமில்லை. 3) நாங்கை நன்னடுவுள் அமைந்துள்ள இந்த அழகிய தலத்தை திருமங்கையாழ்வார் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். 4) திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின் (திருக்கோழி) அழகிய மணவாளப் பெருமான் ஆவார். இவரே பேரருளாளன் என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார். எனவேதான் உறையூரில் உள்ளதைப் போன்றே இங்கும் பெருமாளுக்கு இரண்டு பிராட்டிகள். இதனைத் திருமங்கையாழ்வாரும், பேரணிந் துலகத்தவர் தொழுதேத்தும் பேரருளா ளனெம் பிரானை வாரணி முலையாள் மலர் மகளோடு மண்மகளுடன் நிற்ப சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே | என்று மங்களாசாசனம் செய்துள்ளார். உறையூரில் கமலவல்லி நாச்சியார், பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார் இங்கு அல்லி மாமலர் நாச்சியாரும் பூமாதேவியும் எழுந்தருளியுள்ளனர். 5) கருடசேவைக்கு இவரும் வருவார். |