பக்கம் எண் :

214

34. திருவாலி - திருநகரி

     தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
          பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
     தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
          ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை
                         யுரையாயே - (1198)
                          பெரியதிருமொழி 3-6-1

     அழகிய பொறிகளை உடைய சிறிய வண்டே, நீ உன் துணையைப்
பிரியாது பூக்களை விரித்து மதுவை நுகர்ந்து, மகரந்தத்தைச் சிதறிவிட்டு
மலர்களை உழக்கித் திரிகின்றாயே, ஆனால் என்னைப்பார் என் நாயகனை
விடுத்து தனிமையில் வாடுகின்றேன். ஏ வண்டே, உனக்குத்தான்
பிரிவாற்றாமை என்பது என்னவென்று தெரியும், என் நாயகன் இருக்கும்
இடத்தை நான் சொல்கிறேன். நீ போய் எனது நிலைமைகளை அவனுக்கு
உணர்த்தி விடு.

     என் தலைவன் எங்கிருக்கிறான். தெரியுமா, எந்நேரமும் தீ அவியாது,
வேத ஒலிகளால் சூழப்பட்ட திருவாலியில் இருக்கிறான். அவன்தான் ஏவரி
வெஞ்சிலையான் என்று திருமங்கையாழ்வாரால் பாசுரம் பெற்ற இத்தலம்
சீர்காழியிலிருந்து தென் கிழக்கில் சுமார் 6மைல் தூரத்தில் உள்ளது.

     திருவாலி தனியாகவும், திருநகரி தனியாகவும் உள்ளது.
திருவாலியிலிருந்து திருநகரி சுமார் 4 கி.மீ. தொலைவு. திருவாலி சுமாரான
ஸ்தலமாகத் திகழ்கிறது. திருநகரி பேரழகுடன் பிரம்மாண்டமான ஸ்தலமாக
விளங்குகிறது.

     இவ்விரு ஸ்தலங்களும் தனித்தனியே இருந்தாலும் ஒரே
ஸ்தலமாகத்தான் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. முதலில் திருவாலியைப்
பற்றிக்காண்போம். கருடபுராணம் இதைப் பற்றிக் கூறுகிறது.

     ஒரு காலத்தில் ஆலி நாடு என்று ஒரு குறுநிலப் பகுதி மிகப் புகழ்
வாய்ந்ததாக இருந்தது. பில்வாரண்யம் என்று அழைக்கப்பட்ட ஆரண்யத்தை
ஒட்டியதாக இப்பகுதி அமைந்திருந்தது.

     திருமால் நரசிம்ம அவதாரம் செய்தபோது இரண்யனை வதம் செய்து
சீற்றம் அடங்காமல் இருக்கக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் பூலோகம்
மேலும் அழியாது காக்கப்படவேண்டும்