பக்கம் எண் :

215

     என்று பிராட்டியை வேண்ட, பிராட்டி எம்பெருமானின் வலது
தொடையில் வந்து அமர்ந்தார். அமர்ந்த தேவியை எம்பெருமான்
ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதால்
திருவாலி (திருவாகிய இலக்குமியை ஆலிங்கனம் செய்தமையால்) ஆயிற்று.

     திருமங்கையாழ்வாருக்கு காலத்தால் முற்பட்ட குலசேகராழ்வார் ஆலி
நகர்க்கதிபதியே அயோத்தி யெம்மரசே ராகவனே தாலேலோ என்று
மங்களாசாசனம் செய்துள்ளதிலிருந்து இத்தலத்தின் தொன்மை விளங்கும்.

     இந்த ஆலிநாட்டைத் தலைநகரமாகக் கொண்டுதான் திருமங்கை
குறுநில வேந்தனாய்த் திகழ்ந்தார். எனவேதான் அவருக்கும் ஆலிநாடான்
என்றும் பெயருண்டாயிற்று. திருமங்கையாழ்வார் ஆட்சி புரிந்ததற்கான
மாடமாளிகைகளோ, அரண்மனைகளோ அவற்றின் ஆதாரச் சுவடுகளோ
இப்போது இங்கு இல்லை. ஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும்,
சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலுமே இப்போது
திருவாலியில் உள்ள அடையாளங்களாகும். ஆனால் திருநகரியை ஒட்டி
திருமங்கை பிறந்த குறையலூர் வரை பூமிக்குள் பண்டைக் கட்டிடங்களும்
அரண்மனையும் புதைந்துள்ளதாகவும் சிற்சில இடங்களில் தோண்டும்போது
கட்டிடங்கள் இருந்தமைக்கான அடையாளங்கள் தென்படுவதாகவும், இப்பகுதி
மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூலவர்

     அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்

உற்சவர்

     திருவாலி நகராளன்

தாயார்

     பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)

தீர்த்தம்

     இலாக்ஷ்ண புஷ்கரணி

விமானம்

     அஷ்டாச்சர விமானம்

காட்சி கண்டவர்கள்

     திருமங்கையாழ்வார்