பக்கம் எண் :

216

சிறப்புக்கள்

     1) திருமங்கையாழ்வாரின் தேவி குமுதவல்லி நாச்சியார் வளர்க்கப்பட்ட
இடம்.

     2) இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம ஷேத்ரம் என்று பெயர் லட்சுமி
தேவியுடன் நரசிம்ம ரூபமாய் எழுந்தருளியிருப்பதால் இப்பெயருண்டாயிற்று.
இதனையும் சேர்த்து இவ்விடத்தைச் சுற்றி ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள்
உண்டு. அவைகள் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்கள் என்று இன்றும்
வழங்கப்படுகின்றன.

     1. குறையலூர்        - உக்கிர நரசிம்மன்
     2. மங்கை மடம்      - வீர நரசிம்மன்
     3. திருநகரி          - யோக நரசிம்மன்
     4. திருநகரி          - ஹிரண்ய நரசிம்மன்
                          (திருநகரியில் இரண்டு
                          நரசிம்மர்கள் சன்னதிகள்
                          உள்ளன)
     5. திருவாலி         - லட்சுமி நரசிம்மன்

     3) திருமங்கைக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று பிராட்டி
எம்பெருமானுக்கு விடாது வேண்டுகோள் விடுக்க அவ்வாறாயின் திருவாலியில்
தவஞ்செய்து கொண்டிருக்கும் பூர்ணமஹரிஷியின் புத்திரியாகப் போய்
அவதாரஞ்செய் நான் வந்து திருமணக்கோலத்தில் உன்னை ஏற்றுக்கொள்ளும்
போது திருமங்கைக்கு அருள் பாலிப்போம் என்றார்.

     பூர்ண மஹரிஷி தவம் புரிந்தமையால் பூர்ண புரி என்றும் இதற்கு ஒரு
பெயருண்டு.

     4) அம்மன், அப்பன் என்ற எளிய தமிழ்ச்சொற்கள்
எடுத்தாளப்பட்டுள்ளது. என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன்
என்று திருவிண்ணகர் (ஒப்பிலயப்பன்) பெருமானை நம்மாழ்வார் மாந்தி
மகிழ்கிறார்.

     அதுபோல் திருமங்கையாழ்வார், திருவாலியம் மானை,
அணியாலியம்மானை என்று குறிக்கின்றார்.

     5) திருமங்கையாழ்வாராலும், குலசேகராழ்வாராலும் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம்.