பக்கம் எண் :

225

35. திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்)

     போதலர்ந்த பொழில் சோலைப்
          புறமெங்கும் பொறு திறைகள்
     தாதுதிர வந்தலைக்கும்
          தட மண்ணி தென்கரைமேல்
     மாதவன் றானுறையுமிடம்
          வயல் நாங்கை வரிவண்டு
     தேதென வென்றிசை பாடும்
          திருத்தேவனார்த் தொகையே - (1248)
                       பெரிய திருமொழி 4-1-1

     என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும்
குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின்
தென்கரையில் உள்ளது.

     ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க (ஸ்ரீமந் நாராயணன் 11 மூர்த்திகளாக
திருநாங்கூருக்கு வந்தபோது) தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய்
சபை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.

மூலவர்

     தெய்வநாயகன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     கடல் மகள் நாச்சியார்

உற்சவர்

     மாதவப் பெருமாள்

தாயார்

     மாதவ நாயகி

தீர்த்தம்

     சோபன புஷ்கரணி, தேவஸபா புஷ்கரணி