5) அகத்தியமுனிவர் நடந்தாய் வாழி காவேரி என்று காவிரித்தாயைத் தரிசித்துக்கொண்டே அதன் பாதையில் நடந்து வந்தவர் இந்த இடத்தைத் தாண்டிச் செல்லாது இங்கேயே காவிரி தரிசன பயணத்தை முடித்துக் கொண்டு தங்கிவிட்டார். ஆங்காங்கே அகத்தியருக்கு சிறிய சிறிய கோவில்கள் அமைந்திருந்தாலும் இங்கிருப்பதுதான் கடைசியானதாகும். 6) பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் வதனத்துடன் திகழ்கிறார். 7) திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். 8) கீழ்வரும் பாடலில் தாமரையாள் கேள்வன் என்று இப்பெருமானின் திருநாமத்தை பொய்கையாழ்வார் குறிப்பிடுவதால் இத்தலத்தை அவரும் மங்களாசாசனம் செய்துள்ளதாகக் கூறுவர். பெயருங் கருங்கடலே நோக்குமாறு, ஒன்பூ உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும் தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் திருவந்தாதி-67) | இருப்பினும் பார்த்தன் பள்ளி என்று ஸ்தலத்தின் பெயரைக் குறிப்பிடாததால் மங்களாசாசனம் எனக் கொள்வதற்கில்லை யென்பர். வேங்கடவன் என்னுஞ்ச் சொல்லால் திருமலைநாதனை மறைமுகமாக உணர்த்தும் பாசுரங்களை திருமலைக்கு மங்களாசாசனமாக எடுத்தாண்டுள்ளமையால் இந்தப் பிராட்டியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுவதால் இத்தலத்தை பொய்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளார் என்றே கொள்ளலாம். 9) “யாக்ஞவல்ய ஸ்ம்ருதி” என்ற வடநூலும் இத்தலத்தைப் பற்றி பேசுகிறது. 10) “செய்யருகே புனல்பாய பணைத்தோள் பாகம் பாம்பனையான்” | |