என்பது சம்பந்தரின் பாட்டு, பாம்பனை என்ற சொற்றொடரில் இத்தலத்தையே இவர் குறிக்கிறார். சிவபெருமான் பாம்பை தலையில் சூடிக்கொண்டார். ஆனால் திருமாலோ பாம்பை படுக்கையாகக் கொண்டார். எனவே பாம்பனையான் என்ற சொல்லால் இத்தலத்தையே குறித்ததாகவும் கூறுவர். 11) திருநாங்கூர் 11 திருப்பதிகளில் ஒன்றான இத்தலம் பலாசவனச் ஷேத்திரம், புரசங்காடு என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. பலாசவனம் என்பதும் இத்தலம் உள்ள பகுதியோடு முடிவடைகிறது. 12) இங்குள்ள கட்க புஷ்கரணி கங்கா தீர்த்தம் என்றும், விஷ்ணு பாத தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. 13) திருமங்கையாழ்வார் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறு நாள் இங்கே எழுந்தருளி மங்களாசாசனம் செய்வதாக ஐதீஹம். 14) பார்த்தன் பள்ளி, பார்த்தன் பள்ளி என்றே மங்களாசாசனம் இருப்பதால் இது அர்ஜூனனுக்காக உண்டான ஸ்தலம் என்பது தெளிவு. அர்ஜூனனுக்குத் தோழனாக இருந்த கண்ணன் அவ்விதமாகவே இங்கு காட்சி கொடுத்தது ஒரு தனிச்சிறப்பு. ஆலயத்தின் அருகேயுள்ள கட்க புஷ்கரணியும், எம்பெருமான் இடையில் கத்தி வைத்திருப்பதும், இங்கு கத்தியால் தரையைக் கீறி கங்கையைக் கொணர்ந்ததற்கு அடையாளமாயிற்று. 15) தசரதன் இவ்விடத்தில் ஒரு யாகஞ்செய்ததாகவும் ஐதீஹம். 16) பதினொரு பெருமாள்களில் ஒருவராக இங்கு எழுந்தருளிய இப்பெருமாள் குருக்ஷேத்திரத்திலிருந்து வந்தவரென்றும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதியே இங்கு வந்தாரென்றும் சொல்வர். திருவல்லிக்கேணி பெருமாளே இங்கு வந்ததாகக் கொள்வர். ஏனெனில் திருவல்லிக்கேணியில் இருப்பவர் குருஷேத்ர போரை நடத்திய பார்த்த சாரதியல்லவா? 17) மூலவர், உற்சவர், இருவருக்குமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவி மார்கள் புடை சூழ இருப்பது 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும்தான். இவர் பார்த்தசாரதியான கண்ணபிரானல்லவா? எனவே தேவிகள் புடைசூழ இருப்பதில் அதிசயமென்னவுள்ளது. |