பக்கம் எண் :

251

கொல்லிமலைத் தொடர், சவ்வாது மலைத் தொடர், நீலகிரி போன்றன
வளங்கொழித்த தாக்குகின்றன.

     இங்கு தேன் (கொங்கு) கிடைத்ததால் இப்பெயர் அமைந்ததென ஒரு
சாரரும், பொன் கிடைத்ததால் கொங்கு நாடென ஒரு சாரரும் கூறுவர்.

     இந்தக் கொங்கு நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையே இருந்த
பகுதிதான் நடு நாடாகும். இவ்வாறு இடைப்பட்டிருந்தது மட்டுமன்றி பாண்டி
நாடும் சேர நாடும் இந்நாட்டின் எல்லையிலிருந்து தென்மேற்காகப்
பிரிவதாலும், மேற்சொன்ன கொங்கு நாடும் சோழ நாடும் வடக்கேயும்
கிழக்கேயும் அமைவதாலும், நிலவமைப்பில் நடு நாடாயிற்று.

     இந்நாட்டினை மலையமான்கள் ஆண்டு வந்தனர். கடைச்சங்க காலம்
முதல்பல நூற்றாண்டுகள் வரை அவர்கள் தொடர்ந்து ஆண்டு வந்தனரென்று
அறிய முடிகிறது. இவர்களில் மிகச் சிறந்த மலையமான் திருமுடிக்காரியின்
புகழைச் சங்க நூல்கள் எடுத்தியம்புகின்றன. இதன் தலைநகர்
திருக்கோவலூராகும். இந்த நடுநாட்டின் கீழ்த்திசையில் திருவஹீந்தபுரம் (திரு
அயிந்தை) என்னும் திவ்ய தேசமும் மேல் திசையில் திருக்கோவலூரும் நடு
நாடிரண்டு எனக் குறிப்பிடப்படும் திவ்ய தேசங்களாகும்.
 

     “பொன்னுடை யயிந்தரபுரம் திருக்கோவலூர்
          இந்நடு நாட்ட திரண்டையும் சேவித் தேத்துவோம்”
     என்பது திவ்ய தேசக் கணக்கிற்குண்டான பாடலாகும்.

     நடுநாட்டில் இரண்டே திவ்ய தேசங்களிருப்பினும் இரண்டும் மிக்குயர்
கீர்த்தியும், மேன்மையும் பொருந்தியதாகும்.

     ஒன்று திருவிக்ரம அவதாரத்தால் புகழ்பெற்றது. மற்றொன்று ஆதிசேடன்
மகத்துவத்தால். அது மட்டுமின்றி தமிழ்நாட்டிலேயே கல்விக்கான அவதார
மூர்த்தி ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளியிருப்பதும் நடு நாட்டு
ஸ்தலங்களில் ஒன்றான திரு வஹீந்திரபுரத்தில்தான்.

     ஒன்று மூவுலகையும் அளந்த பராக்கிரமம் பொருந்திய எம்பெருமானைப்
பெற்றது. மற்றொன்று நான்கு வேதங்களையும் சகல கலைகளையும் உலகிற்கு
அளித்த பெருமாளைப் பெற்றது. இது ஒன்றே இந்நடு நாட்டு ஸ்தலங்கட்கான
தனிச் சிறப்பாகும்.

     இனி இவ்விரண்டு திவ்ய தேசத்தின் ஸ்தல வரலாற்றினைக் காண்போம்.