பக்கம் எண் :

252

41. திருவயிந்திரபுரம்

     மூவராகிய ஒருவனை
          மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
     தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத்
          தண் திருவயிந்திர புரத்து
     மேவு சோதியை வேல் வலவன்
          கலிகன்றி விரித்துரைத்த
     பாவு தண் டமிழ்ப் பத்திவை
          பாடிட பாவங்கள் பயிலாவே. (1157)
                    பெரிய திருமொழி 3-1-10

     என்று திருமங்கையாழ்வார் பாடிப் பரவசித்த இத்தலம் கடலூர்
நகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம்
என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று
வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும்.

வரலாறு

     இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து
அத்தியாயங்களிலும், ஸ்காந்த புராணத்திலும், ப்ரஹன் நாரதீய புராணத்திலும்
கூறப்பட்டுள்ளது. இத்தலம் பற்றி ஸ்காந்த புராணம் பின்வருமாறு உரைக்கிறது.

     ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்கட்கும் கடும்போர் மூண்டு
யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். முறியடிக்கப்பட்ட தேவர்கள்
திருமாலைத் துதித்து உதவி புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்க, அவர்கட்கு
உதவ வந்த ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தின் மேலிருந்து போரிட
அசுரர்கள் நாராயணனையும் எதிர்த்து கடும்போர் புரிந்தனர். இறுதியில்
ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தை ஏவ, அது சகல அசுரர்களையும் அழித்தது.

     இந்நிலையில் அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு
எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அதுவும் சக்கரத்தின் பாற்பட்டு அதற்கோர்
அணிகலன் போன்று அச்சக்கரத்தையே சார்ந்து நிற்க, இது கண்ட சிவன் தன்
ஞான திருஷ்டியால் நோக்க, ஸ்ரீமந் நாராயணன் அங்கு தனது மும்மூர்த்தி
வடிவத்தை அரனுக்கு காண்பித்தார். அவ்வடிவில் ஸ்ரீமந்