நாராயணனுடன் பிரம்மா, சிவன், தேவர்களும் தெரிய, சிவன் துதித்து நிற்க, எம்பெருமான் சாந்தமுற்று சக்ராயுதத்தை ஏற்றுக் கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே சேர்ப்பித்து ரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோயில் கொண்டார். அவ்வமயம் தாக சாந்திக்கு நீர் கேட்க, நீர் கொணர கருடன் ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேடன் தரையிலிறங்கி தனது வாலால் பூமியை அடித்துப் பிளந்து தீர்த்தம் உண்டு பண்ணி பகவானுக்கு அளித்தார். இவ்வாறு ஆதிசேடனால் திருவாகிய பூமியை வகிண்டு நீர் கொண்டு வரப்பட்டதால் திரு+வகிண்ட+நீர் (திருஹிந்தபுரம்) எனப் பெயருண்டாயிற்று. ஆதிசேடன் கைங்கர்யத்தாலே இத்தலம் திருவஹீந்திபுரம் என அழைக்கப்படுகிறது. அவன் பெயராலேயே இங்குள்ள தீர்த்தமும் சேஷ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் எல்லைகளை பூலோகத்தில் திருக்குடந்தைக்கு வடக்கில் 6 யோசனை தூரத்திலும், காஞ்சிக்குத் தெற்கிலும், சமுத்திரத்திற்கு மேற்கே அரையோசனை தூரத்திலும் அமைந்துள்ளது என்று புராணம் வர்ணிக்கிறது. மூலவர் தெய்வநாயகன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தேவர்கட்கு நாதனாக இருந்து எம்பெருமான் யுத்தம் செய்தமையால் தேவ நாதன் என்றும் திருநாமம் உண்டு. உற்சவர் மூவராகிய ஒருவன் (தேவன்) தாயார் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார். தேவர்களைக் காப்பதால் ஹேமாம்புஜ வல்லி என்றும், பார் எல்லாம் காக்கும் தன்மையால் பார்க்கவி என்றும் திருநாமமும் உண்டு. விமானம் சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம் காட்சி கண்டவர்கள் கருடன், ஆதிசேடன், சிவன், தேவாசுரர்கள் |