பக்கம் எண் :

256

     7) 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய
மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன.

     8) வைகானஸ முறைப்படி பூஜைகள் நடத்தப்படும் இத்தலத்து
எம்பெருமான் திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையன் என்பதோர் ஐதீஹமும்
உண்டு.

     9) வெகு காலத்திற்கு முன் கோவில் பிரகாரத்திலிருந்த ஒரு பழைய
புன்னை மரத்தின் வேரிலிருந்து சக்ரவர்த்தி திருமகனுடன் (ஸ்ரீராம பிரானுடன்)
நம்மாழ்வாரும் தோன்றினாரென்றும் அதனாலே இங்கு இரண்டு
நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர் என்பதும் வரலாறு.

     10) திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில்
மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இப்பெருமான் மீது வேதாந்த தேசிகன்
மும்மணிக் கோவையருளிச் செய்தார். மணவாள மாமுனிகள் பன்முறை
எழுந்தருளி மங்களாசாசனம் செய்த தலம். வடமொழியில் தேவநாயக
பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம்
என்ற தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப் பரக்கப்
பேசுகின்றன.

     11) வ்ருத்தா சுரன் என்னும் அரக்கன் தனது கடின தபோ பலத்தால்
பெற்ற சக்தியைக் கொண்டு இந்திரனை வென்று இந்திரலோகத்தை தன்
கையகப்படுத்திக் கொண்டான். இந்திரன் இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள
தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டானென்றும். தேவர்கள் இந்திரனை எங்கு
தேடியும் காணமுடியாது போகவே திருமாலைக் குறித்து தவஞ்செய்து தங்களது
தலைவனைத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர். நீங்கள்
அயிந்திரபுரத்தில் ஒரு வைஷ்ணவ யாகம் செய்தால் தாமரைத் தண்டில்
ஒளிந்துள்ள இந்திரன் வருவான் என்று திருமால் அருள அவ்விதமே இங்கு
யாகம் நடத்த இந்திரன் தோன்றினான். திருமாலும் பிரத்யட்சமாகி இந்திரனுக்கு
வஜ்ராயுதத்தைக் கொடுக்க அதனால் வ்ருத்தாசுரனைக் கொன்று மீண்டும்
இந்திரன் தனது நாட்டைப் பெற்றானென்பர்.