பக்கம் எண் :

258

காதுகள். வேதமுத நுரை தள்ளும் வாய். கருணை பொழியும் விழிகள்.
பீதாம்பர ஆடை தரித்து பெரிய பிராட்டியை மார்பில் கொண்ட
திருக்கோலம்.

     15) இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள் உண்டென்றும் அவைகள்
இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும் என்றும்
சொல்வர்.

     16) கலியுகத்தில் இவ்விடத்தில் திருமால் அணிந்துள்ள மணியின்
அம்சமாக ஒரு மகான் அவதரிக்கப் போகிறாரென்று புராணங்களில்
கூறியதற்கொப்ப ஸ்ரீமாந் நிகாமந்த தேசிகர் இங்கே 40 ஆண்டுகாலம்
எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு அருந்தொண்டாற்றி
வளர்த்தார். வடகலை சம்பிரதாயத்திற்கு இத்தலம் ஒரு பாசறை போல்
விளங்கிற்று என்றால் அது மிகையல்ல.

     நாற்பதாண்டுகள் இந்த திவ்ய தேசத்தில் ஜீவித்திருந்த தேசிகர்
இவ்விடத்தில் ஒரு திருமாளிகை கட்டித் தமது திருக்கரத்தால் ஒரு கிணறும்
வெட்டினார். இவர் வாழ்ந்திருந்த திருமாளிகை இன்றும் உள்ளது.

     இங்கு ஸ்ரீதேசிகர் தம்மைப் போல ஒரு திருமேனி செய்தார். உமது
திருமேனிக்கும் உம்மைப்போல் உயிரோட்டம் தரமுடியுமா என்று ஒரு சிற்ப
சாஸ்திரி கேட்க, ஸ்ரீராமானுஜர் பெரும்புதூரில் வடித்ததைப் போன்று இங்கு
தேசிகரும் தம்மைப் போல் ஒரு திருமேனி செய்தார். திருமேனி செய்து
முடிக்கப்பட்டவுடன் சிற்ப சாஸ்திரி அத்திருமேனியைத் தொட்டபோது
அதில் விரல் கீறல் பட்டு ரத்தம் கசிந்ததாகவும், ஸ்ரீதேசிகரின் மகிமை
அறியாது அவரிடம் ஆணவத்துடன் நடந்து கொண்ட முறைக்கு அச்சிற்ப
வல்லுனர் தேசிகரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டான் என்றும்
சொல்வர்.

     எண்ணற்ற அருஞ்செயல்கள் புரிந்து ஹயக்ரீவர் மீதும், தெய்வ நாயகன்
மீதும் அளவற்ற பக்திகொண்டு அரும்பெரும் நூல்கள் இயற்றினார் தேசிகர்.

     ஸ்ரீதேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜெபித்து ஹயக்ரீவரை இங்கு நேரில்
தரிசித்துவிட்டு மலையிலிருந்து இறங்கி வரும்போது தெய்வநாயகனை
வழிபடாது பெண்ணை யாற்றங்கரைபற்றிச் செல்ல அடியார்க்கு மெய்யனான
தெய்வநாயகன் வழிமறித்து இவருக்கு காட்சி கொடுத்ததாகவும் ஐதீஹம்.