பக்கம் எண் :

266

     5) பரசுராமர் இங்கு தவம் செய்தாரென புராணங்கூறும். அகத்தியர்
இங்கு தவமியற்றினாரென தமிழிலக்கியங்கள் கூறும். முற்காலப்
பல்லவமன்னர்களாலும், கிருஷ்ண தேவராயராலும் திருப்பணிகள்
செய்யப்பட்ட ஸ்தலம்.

     6) இங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களை பிரம்மனிடம் கொடிய
வரங்களைப் பெற்ற பாதாள கேது என்னும் அரக்கன் துன்புறுத்தியதாகவும்,
முனிவர்களால் வேண்டப்பட்ட நிலையில் குசத்வ ராஜன் என்னும் மன்னன்
ஆகாயத்திலிருந்து திருமாலால் அனுப்பப்பட்ட குதிரையிலேறி அவ்வரக்கனைக்
கொன்று தானும் மோட்சம் பெற்றாரென பிரம்மாண்ட புராணங்கூறுகிறது.

     7) கிருஷ்ண பத்திரா நதிதான் இங்கு ஓடும் பெண்ணையாறாகும்.
வெண்ணெய் உருகுமுன் பெண்ணை உருகும் என்று சிறப்பிக்கப்பட்ட
நதியாகும். பிரம்ம புராணத்தின் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களுள் ஒன்றாக
இது குறிக்கப்படுகிறது. பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள்.
 

     1. திருக்கோவலூர்     2. திருக்கண்ணங்குடி
     3. திருக்கவித்தலம்    4. திருக்கண்ணபுரம்
     5. திருக்கண்ணமங்கை

     8) இந்த ஸ்தலம் தான் திவ்ய பிரபந்தத்திற்கு விளை நிலமாகும். உலகில்
முக்கியமாக, ஒரு ஜீவன் மிக முக்கியமாக அறிய வேண்டிய ரகசியங்களான
திருமந்திரம், துவயம், சரமச் லோகார்த்தம், முதலியவைகளை மூன்று
பிரபந்தங்களாக முதல் மூன்று ஆழ்வார்கள் இங்கு வெளியிட்டருளியமையால்
இத்தலம் ஜீவாத்மாக்கள் கடைத்தேற வித்திட்ட விளைநிலமாகும்.
ஆழ்வார்களின் மங்களாசாசனத்திற்கு அடிகோலிய ஸ்தலமாகும்.

     திருவிளக்கு ஏற்றல் என்ற வியாஜ்யத்தாலே பொய்கை யாழ்வார்
மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழ் தன்னையும், ஒன்றாய்க் கூட்டி
திரித்து ஒரு திருவிளக்கு ஏற்றினார் என்பர் இத்தலத்து ஜீயர் சுவாமிகள்.

     9) இடைகழியில் ஆழ்வார்கட்கு எம்பெருமான் காட்சி கொடுத்ததால்
இத்தல பெருமாளுக்கு இடைகழி ஆயன் என்னும் பெயர் உண்டு. நடுநாட்டின்
முதலாவது ஸ்தலமாகையாலும் விண்ணுலகிற்கும், பாதாள லோகத்திற்கும்