பக்கம் எண் :

273

43. திருக்கச்சி அத்திகிரி (காஞ்சிபுரம்)

     அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்
          துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் - மூத்தீ
     மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் றனக்கும்
          இறையாவான் எங்கள் பிரான் - (2277)
                     - இரண்டாந்திருவந்தாதி - 96

     கருடனாகிய புள்ளை வாகனமாகக் கொண்டு ஊர்வவன். அழகார்ந்த
மணிகளுடன் கூடிய நாகமான ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு
அறிதுயில் செய்பவன். மூன்று வகையான அக்னியானவன். வேதங்களுமாகி
நிற்பவன். திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகாலம் என்னும்
கொடிய நஞ்சை உண்ட சிவனுக்கும் இறையானவன். அவன்தான் இந்த
அத்தியூரான். எங்கள் பிரானும் அவன்தான் என்று பூதத்தாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் காஞ்சிபுரத்திலேயே உள்ளது. காஞ்சி
என்றதும் நமக்கு நினைவுக்கு வரக்கூடியது பிரம்மாண்டமான இந்த வரதராஜன்
சன்னதியேயாகும். இத்தலம் சின்னக் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

     இத்தலம் பற்றி பாத்மபுராணத்தில் ஏழு அத்தியாயங்களிலும் கூர்ம
புராணத்தின் 52, 57 ஸ்லோகங்களிலும் பேசப்பட்டுள்ளது. தமிழ்
இலக்கியங்களில் பலவற்றிலும் இத்தலம் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன.

     ஒரு சமயம் தேவியர்களின் துணையின்றி மும்மூர்த்திகள் தனித்து யாகம்
செய்து வெற்றி காண முடியாதென்று விவாதம் ஏற்பட பிரம்மன் நான் செய்து
காட்டுகின்றேனென்று உலக நன்மைக்காக ஒரு யாகத்தை ஆரம்பிக்க, சரஸ்வதி
அந்த யாகத்தை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.

     பிரம்மனின் யாகத்தைக் கெடுக்க சரஸ்வதி எத்தனையோ முயற்சிகள்
செய்தாள். அக்னி ரூபத்தில் அசுரர்கள் சரஸ்வதி அனுப்பினாள். பிரம்மனுக்காக
அந்த அக்னியை கையில் தீபம் போல் ஏந்தி தீபப் பிரகாசமாக எம்பெருமான்
நின்றார். இதனால் சினங்கொண்ட சரஸ்வதி கொடூரமான யானைகளைப்
படைத்தனுப்பி யாகத்தை அழிக்க எத்தனித்தாள். எம்பெருமான் நரசிம்ம
ரூபனாகி யானைகளை வென்று விரட்டியடித்தார்.