| பின்னர் சரஸ்வதி அரக்கர் கூட்டங்களைப் படைத்து அனுப்பினாள். அவ்வரக்கர்களைத் துவம்சித்து எம்பெருமான் ரத்தப் பிரவாளராக நின்றார். இந்நிலையில் யாகத்தைக் கலைக்க 8 கைகளைக் கொண்ட காளியைப் படைத்தனுப்பினாள். திருமால் 8 கைகள் கொண்ட அட்டபுயக்கரத்தானாகத் தோன்றி காளியின் கொட்டத்தை அடக்கினார். இவ்வாறு தனது முயற்சிகள் எல்லாம் வீணாவதைக் கண்ட சரஸ்வதி தானே ஒரு வேகமுள்ள நதியாக வேகவதி என்ற பெயரில் பிரளயம் போல் வர எம்பெருமான் அந்த நதிக்கு எதிரே அணையாகப் படுத்துத் தடுத்தார். அணையாக வந்துபடுத்து சரஸ்வதியின் வெள்ளப் பெருக்கைத் தடுத்த பிறகு பிரம்மன் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்ய திருமால் அக்னி ஜு வாலையாக காட்சிக் கொடுத்து பிரம்மனின் யாகத்தைத் தொடர அருள்புரிந்தார். (அக்னி ஜ்வாலையாக இவ்விடத்து எம்பெருமான் எழுந்தருளியமையை இங்குள்ள உற்சவரின் திருமுகத்தில் அக்னியின் வடுக்கள் போன்று ஜ்வாலை வீசக்கூடிய புள்ளிகளை இன்றும் காணலாம்.) இவ்வாறு தனது இடைஞ்சல்கள் எல்லாம் தவிடுபொடியாவதைக் கண்ட சரஸ்வதி நாணமுற்று ஓய்ந்தாள். இதன்பின் பிரம்மா யாகத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் யாகத்தில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தை வழக்கப்படித் தமக்குத் தரவேண்டுமென்று தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட சுவர்க்கம் முதலான பலனைக் கோரி செய்யும் யாகங்களில் தான் உங்களுக்குப் பங்குண்டு. இது உலக நன்மைக்காகச் செய்யும் யாகம். இது லோக சிருஷ்டியாகும். எனவே இதில் யக்ஞ அங்கமாக உங்கள் பெயர்கள் கூறினாலும், உங்களிடத்திலும் அதேபோல் உலகத்தின் சகல ஜீவன்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் நாராயணனுக்கே அவிர்ப்பாகம் செல்லும். அவரே இதனை ஏற்றுக்கொள்வார் என்று சொல்லி யாகத்தைத் தொடர்ந்தார். யாகம் முடியும் தருவாயில் பேரொளி பொருந்திய விமானம் ஒன்று அதில் தோன்றியது. கோடிப்பிறவியில் செய்த புண்ணியத்தால் தரிசிக்கத் தகுந்த அந்த விமானம் புண்யகோடி விமானமாகும். அதில் சங்கு சக்ர கதா பாணியாக எம்பெருமான் தோன்றி அவிர்ப்பாகத்தையேற்றுக் கொள்ள யாகம் முடிவுற்றது. யாகத்தில் பங்கு கொண்ட தேவர்களுட்பட்ட அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுத்ததால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் உண்டாயிற்று. ஸ்ரீமந்நாராயணன் புண்ணிய கோடி விமானத்துடன் இங்கு |