| எழுந்தருளிய நன்னாள் ஒரு சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும். இதேபோல் எம்பெருமான் இங்கு நித்யவாசம் செய்து வேண்டியவர்க்கு வேண்டிய வரமெல்லாம் கொடுக்க வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க எம்பெருமானும் அதற்கிசைந்தார். உடன் தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது. அதனால் இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் வெள்ளைநிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது. க. என்றால் பிரம்மன் என்றும் அஞ்சிரம் என்றால் பூஜிக்கப்படல் என்பதாலும் கஞ்சிரம் என்றாகி கஞ்சிதபுரியாகி காலப்போக்கில் மருவி காஞ்சிபுரமாயிற்றென்பர். இத்தலத்தை கிரேதா யுகத்தில் பிரம்மனும் திரேதாயுகத்தில் கஜேந்திரனும் துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும் கலியுகத்தில் அனந்தனும் பூஜித்து உய்ந்தனர். | ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு புத்திரர்கள் இருந்தனர். இவர்கள் கொங்கண தேசத்தில் கௌதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவ்விருவரும் விஷ்ணு பூசைக்கு பழம், புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் தீர்த்தத்தை மூடாமல் வைக்க அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. அதைக்காணாது அப்படியே கொணர்ந்து குருவிடம் கொடுக்க அதிலிருந்து பல்லி தாவியோடியது. இதைக்கண்டு சினந்த முனிவர் இவ்விருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார். தமது தவறுணர்ந்த சீடர்கள் மன்னிப்பு வேண்டி பிராயச் சித்தம் கோரினார். இந்திரன் (கஜேந்திரனாக) யானையாகி வரதனைத் தரிசிக்க இச்சன்னதியில் நுழைவான். அப்போது உங்கள் சாபமகலும் என்று தெரிவிக்க இருவரும் இத்தலத்தின் பிரகாரத்தில் பல்லிகளாக வந்தமர்ந்தனர். பின்பு இந்திரன் இத்தலத்தில் நுழைந்ததும் இவர்களின் சாபமகன்று தங்கள் பூர்வஜென்ம உடம்பைப் பெற்று வரதனைச் சேவித்து முக்தியடைந்தனர். |