| இந்நிகழ்வைக் குறிக்குமாற்றான் தற்போது இத்தலத்தின் பிரகாரத்தில் 24வது படிக்கெதிரில் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான இரண்டு பல்லிகள் செய்து அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டு வரதராஜப் பெருமாளைச் சேவித்தால் நோயினின்று விடுபடுகின்றனர் என்று ஐதீஹம். (அயோத்தி மன்னன் சகரன் என்பவனின் மகனும் மனைவியுமே சாபத்தினால் பல்லிகளாக மாறி இவ்விதம் ஆனர் என்றும் ஒரு கதையுண்டு) வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மாடி போன்ற மலைகளாலானது இத்தலம். வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது. இங்கு அழகிய சிங்கர் (நரசிம்ம அவதார திருக்கோலத்தில்) அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஹரித்ரா தேவியே இங்கு பிராட்டியாக எழுந்தருளியுள்ளார். குஹ விமானம் பிருஹஸ்பதிக்கு காட்சி. 2வது மாடியான மேல்மாடி வரதராஜப் பெருமாள் சன்னதியான அத்திகிரியாகும். தற்போதுள்ள இவ்வமைப்பு பிற்காலத்தில் ஒரு பக்தரால் கட்டப்பட்டதாகும். இவர் முதலில் சிவபக்தனாக இருந்து புத்திரப்பேறு வேண்டி சிவபக்தி செய்ய புத்திரப்பேறு கிட்டாது போகவே விஷ்ணு பூஜை செய்ய புத்திரப்பேறு உண்டாக எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமை பூண்டு இத்தலத்தின் தற்போதைய அமைப்பை அமைத்தார் என்றும் கூறுவர். மூலவர் ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்று பல திருநாமங்கள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் பெருந்தேவித் தாயார் மஹாதேவி தனிக்கோவில் தீர்த்தம் வேகவதி நதி, அனந்த ஸரஸ், சேஷ தீர்த்தம், வராஹ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், விமானம் புண்யகோடி விமானம் |