பக்கம் எண் :

277

காட்சி கண்டவர்கள்

     பிரம்மா, பிருகு, நாரதர் ஆகியோர். கஜேந்திரன் (இந்திரன்) சரஸ்வதி
மற்றும் பலர்.

சிறப்புக்கள்

     1) திருவேங்கடம் போன்றும், திருவரங்கம் போன்றும் எண்ணற்ற
பெருஞ்சிறப்புக்கள் கொண்ட திவ்ய தேசமாகுமிது. காஞ்சியில் உள்ள
வைணவத் தலங்கட்குத் தீபம் போலவும், தொண்டை நாட்டுத் தலங்கட்குத்
திலகம் போன்றும் திகழ்வதாகுமிது. விஷ்ணு காஞ்சியென்றும்,
அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும், ஸ்தய விரத சேஷத்ரமென்றும்
பெயர்கொண்ட இத்தலம் வைணவ சம்பிரதாயத்தில் வடகலைக்கு தமிழகத்தில்
ஒரு தலைமை இடமாகத் திகழ்கிறது. மாமேதைகளும் வடகலை ஞானியரும்,
வைணவ வல்லுனர்களும், பாகவதோத்தமர்களும், பக்தர்களும் எந்நேரமும்
சுற்றிச் சூழ வந்து கொண்டிருக்கும் திவ்யமான திவ்யதேசமாகுமிது.

     2) இங்குள்ள குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் என்றழைக்கப்படும்
அத்திமரத்தாலான சிலையை 40 வருடங்கட்கு ஒரு முறை வெளியே எடுத்து
பூஜை செய்து 10 தினங்கட்குப் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.

     3) சித்ரா பௌர்ணமியன்று இப்போதும் ஒவ்வொர் ஆண்டும் இரவு 12
மணிக்கு மேல் பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக
ஐதீஹம். இந்த தினத்தில் எம்பெருமானுக்குப் பிரசாதம் செய்து வைத்துவிட்டு
பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள். ஒரு நாழிகை (24 நிமிஷம்) கழித்து
எடுத்துப் பார்த்தால் அதில் தூய நறுமணம் கமழும் இக்காட்சி ஆண்டுதோறும்
இங்கு நடைபெறும் வைபவமாகும்.

     4) சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்கட்கு சூரியன்
மறையும்போது சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள் மூலவரின் திருமுகத்தில்
விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களும் கண்டு களிக்கக் கூடிய
இவ்வரிய காட்சி மற்றெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததாகும்.