பக்கம் எண் :

278

     5) பல்லவ மன்னவர்களும், விஜய நகர மன்னர்களும் இத்தலத்திற்குப்
பெருந்தொண்டாற்றியுள்ளனர். இச் சன்னதியின் கிழக்கு கோபுரம் கிருஷ்ண
தேவராயராலும், மேற்கு கோபுரம் பல்லவர்களாலும் கட்டப்பட்டதாகும்.
பல்லவர்களின் கவினுறு கலைச்சிற்பங்களை இந்தச் சன்னதியிலும் காஞ்சியில்
உள்ள பிற சன்னதிகளிலும் காணலாம். பல்லவ மன்னவர்கள் இக்கோவிலுக்கு
கணக்கற்ற நிலங்களைத் தானமாக வழங்கியிருக்கிறார்கள். கி.பி. 7ம்
நூற்றாண்டில் பல்லவ மன்னவர்களின் தலைநகரமாக இந்நகர் விளங்கியது.
இது பின்னரும் பல தலைமுறைக்கு தொடர்ந்தது. விஜயநகர மன்னர் 17
கிராமங்களை வரியின்றி மான்யமாகத் தந்திருந்தார். கிருஷ்ண தேவராயர்
புண்ணியகோடி விமானத்தில் சிற்ப வேலைகள் செய்வித்தார். அச்சுத
தேவராயர் எடைக்கெடை தங்கம் தந்தார். சோழ மன்னர்களும் பல
திருப்பணிகள் செய்துள்ளனர். திருமலை நாயக்கர் பெரும் விலைமதிப்புள்ள
ஆபரணங்களை இப்பெருமாளுக்கு அணிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ்
இப்பெருமாளிடம் ஈடுபாடு கொண்டவர். அவரால் தரப்பட்ட மகரகண்டி மிகப்
புகழ்பெற்றதாகும்.

     6) அபாரமான கலைச்சிற்பங்கள் கொண்ட நூற்றுக்கால் மண்டபம்
ஒன்றும் இங்கு உள்ளது. இந்த மண்டபமும் தாயார் சன்னதியின் முன்புறம்
உள்ள மண்டபமும் அழகிய மணவாள ஜீயரால் கட்டப்பட்டதாகும்.

     7) ஆடி மாதத்தில் வளர்பிறையில் தசமியன்றும் தேய்பிறையில்
ஏகாதசியன்றும் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேடனுக்கு இங்கு
சிறப்பான வழிபாடு நடக்கிறது. இந்த இரண்டு தினங்களிலும் ஆதிசேடனே
இங்கு வந்து வழிபடுவதாக ஐதீஹம்.

     8) திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு
பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸ்வாமி தேசிகன், மணவாள
மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி ஆகியோருக்கும் இந்த
வரதராஜப் பெருமாளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றித் தனி நூலொன்றே
எழுதிவிடலாம்.