| 9) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பிராட்டி திருவீதிவுலா புறப்பட்டு (பிரகாரங்களுக்குள்) வருவார். இதே போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று பெருமாள் புறப்பாடாவார். எப்போதெல்லாம் வெள்ளிக்கிழமையும், ஏகாதசியும் சேர்ந்து வருகிறதோ அப்போதெல்லாம் பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து புறப்பட்டு உலாவருவர். மாலையில் நடைபெறும் வைபவத்தில் பெருமாளையும், பிராட்டியையும் தொடர்ந்து வரும் வைணவ அடியார்கள் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் இசைத்து வருவது இங்கு செவிக்கினிய விருந்து மட்டுமின்றி கண்கொள்ளாக் காட்சியாகும். 10) ஒரு சமயம் தேவசபையில் குழுமியிருந்த முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கிடையே இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற சர்ச்சை ஏற்பட்டு இரு சாரராக அணி பிரிந்து தத்தம் வாதமே உயர்ந்ததென வாதிட்டு இறுதியில் தமது குலகுருவான பிரகஸ்பதியான வியாழ பகவானை அணுகினர். பிரகஸ்பதியான வியாழன், ‘தாழிருஞ்சடைகள் தாங்கி தாங்கருந் தவமேற்கொண்டு, பூழி வெங்கானம்புக்கு, புண்ணிய துறைகளாடும்’ ஞான வாழ்க்கையான துறவறமே சிறந்ததென்று தீர்ப்பளித்தார். இல்லறமே சிறந்ததென்ற அணிக்குத் தலைமை தாங்கிய இந்திரன் பிரகஸ்பதியின் தீர்ப்பைக் கேட்டு சினந்து, பசி, ஏழ்மை, இல்லறம் என்பதையென்னவென்று உணராத பிரகஸ்பதி ஒரு ஏழை அந்தணனாகப் பிறக்கக் கடவது என்று சபிக்க பல குழந்தைகட்குத் தந்தையாய் ஒரு ஏழை அந்தணனாகப் பிறந்து வாழலானார் பிரகஸ்பதி. ஒரு நாள் குழந்தைகளோடு உணவு உட்கொள்ளும் வேளையில் ஒரு நாய் ஒன்று உள்ளே புக, அதை அடித்து விரட்டுமாறு தெரிவிக்க மனிதனைப் போலவே பேசிய நாய் நான் போன பிறவியில் என்னைச் சரணடைந்தவளைக் காக்க தவறியதால் நாயாக அலைகின்றேன். இன்று உன்னைச் சரணடைய நீயும் காக்க தவறினாய். நீயும் நாயாவாய் என்று சபிக்க, இது என்ன தர்ம சங்கடம், உள்ள கஷ்டம் போதாதென்று நாய் ஜென்மம் வேறா என்றெண்ணி நொந்த பிரகஸ்பதி இதற்குப் பரிகாரம் காண பரத்வாஜரை அணுகினார். |