பக்கம் எண் :

280

     அதற்கவர் ஸ்தய வரத ஷேத்ரம் சென்று வரதனைச் சேவித்தால்
தோஷமகலும் என்றார். இந்நிலையில் தேவசபையில் குலகுருவாகவும்,
அரசப்புரோகிதராகவும் விளங்கிய பிரகஸ்பதியில்லாமல் சபைகளையிழந்து
இருந்தது. இது கண்ட தேவர்கள் இந்திரனிடம் முறையிட இந்திரன்
பிரம்மனிடம் சென்றார்.

     பிரம்மன், நான் சித்ரா பௌர்ணமியன்று வரதனை தரிசிக்கச்
செல்லும்போது நீயும் வந்து வரதனை வேண்டிக்கொள் என்று தெரிவிக்க
மூவரும் ஒன்று சேர கிழப்பிராமணராக வந்த பிரகஸ்பதி தனது நிலையை
விவரித்து வரதன் முன் கண்ணீர் மல்க நிற்க, எம்பெருமான் பிரகஸ்பதிக்கு
சுயரூபம் கொடுத்து அமருலகு புகச் செய்தார்.

     11) 108 வைணவத்திருத்தலங்களில் கோயில் என்று திருவரங்கத்தையும்,
திருமலை என்று திருவேங்கடத்தையும், பெருமாள் கோயில் என்று
இத்தலத்தையும் குறிப்பர். இக்கோவிலின் முதல் பிரகாரத்திற்கு சேனையர்
கோன் திருமுற்றமென்றும், மூன்றாவது பிரகாரத்திற்கு ஆளவந்தார்
பிரகாரமென்றும், நான்காவது பிரகாரத்திற்கு ஆழ்வார் திருவீதியெனவும், 5வது
பிரகாரத்திற்கு மாடவீதி எனவும் பெயர். இந்த பிரகாரத்திற்குள்தான்
ஸ்ரீஆளவந்தார் இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம் முதல்வனிவன்
என்றருளினார்.

     12) நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் அயர்வறு அமரர்கள்
அதிபதி என்றது இப்பெருமாளைத்தான் என்று பெரியோர்கள் பொருள்
கூறுவர். இதற்கொப்பவே வேறெங்குமில்லாதவாறு இத்தலத்தில் உள்ள
நம்மாழ்வார் துயரறு சுடர் அடிதொழுதொழு என் மனனே என்று
கூறுவதுபோல் ஞான முத்திரையின்றி தம் நெஞ்சில் கை வைத்து
எழுந்தருளியுள்ளார்.

     13) இங்கு நடைபெறும் வைகாசி விசாகக் கருடசேவை மிகப் பிரஸித்தி
பெற்றதாகும்.

     14) இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இப்பெருமானுக்கு ஆலவட்ட
கைங்கர்யம் செய்தார். அதாவது பெருமாளுக்கு வியர்க்கும் என்று (வேர்க்கும்)
எப்போதும் பெரிய விசிறி கொண்டு விசிறிக் கொண்டேயிருப்பாராம். இந்த
திருக்கச்சி நம்பியைக் காஞ்சி பூர்ணர் என்றும் மொழிவர்.