| இவரிடம் இப்பெருமாள் தினந்தோறும் உரையாடுவாராம். இப்பெருமாளுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஸ்ரீஇராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்குத்தந்தருள வேண்டுமென இப்பெருமானிடம் பெரிய நம்பி விண்ணப்பிக்க திருக்கச்சி நம்பிகள் மூலமாகவே பதில் கூறி இராமானுஜரை திருவரங்கத்திற்கு செல்ல வைத்தார். ஸ்ரீஇராமானுஜரை திருவரங்கத்திற்கு தந்தருளியது இந்த வரதர்தான். 15) யாதவப் பிரகாசருடன் கங்கைக்குச் சென்ற இராமானுஜரை த்ரிவேணி ஸங்கமத்தில் நீராடச் செல்லும்போது தீர்த்துக்கட்ட திட்டம் போட்டிருந்தார் யாதவ பிரகாசர். இச்சதித் திட்டத்தை தன்னுடன் யாத்திரை வந்த தனது சிற்றன்னையின் மகனான கோவிந்தன் மூலம் அறிந்து கொண்ட ராமானுஜர் விந்திய மலைக் காட்டிலேயே தங்கிவிட்டார். வழி தவறித் திகைத்து அலைந்த இராமானுஜருக்கு இத்திவ்ய தேசத்து பெருமாளும் பிராட்டியுமே, ஒரு வேடுவ வேட்டுவச்சி வேடம் பூண்டு, ஒரே இரவில் இராமானுஜரைக் காஞ்சிக்கருகில் இருந்த சாலைக்கிணறு ஓரமாகக் கொணர்ந்து விடுத்து தாக சாந்திக்குத் தண்ணீர் கேட்க இராமானுஜர் தீர்த்தம் கொண்டு வந்து கொடுக்க வந்தபோது அவ்விருவரும் மறைய சற்றே திரும்பி பார்த்த ராமானுஜர் சற்றுத் தூரத்தில் புண்யகோடி விமானத்தையும், காஞ்சி மாநகர் நோக்கிச் செல்லும் மக்களையும் கண்டு பெரிதும் வியந்து தம் பொருட்டு எம்பெருமான் வேடுவ வடிவங்கொண்டு வந்ததை யெண்ணி கண்ணீர் உகுத்தவராய் வைய மாளிகை அடைந்தார். நடந்த வ்ருத்தாந்தங்களைத் தம் தாயாரிடம் கூறி, அவரது அறிவுரையின்படி திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்று அன்றுமுதல் சாலைக் கிணற்றிலிருந்து வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொணர்ந்து கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டார். இன்றளவும் இக்கிணற்றின் தீர்த்தமே கச்சி வரதனுக்கு திருமஞ்சன தீர்த்தமாக எடுத்து வரப்படுகிறது. பெருமாள் இராமானுஜரை மீட்டுக் கொணர்ந்த நாள் இன்றும் உற்சவதினமாகக் கொண்டாடப்படுகிறது. |