மாதங்கள் உருண்டோடி வருடங்களுக்குள் நுழைந்தன. யானைக்கூட்டங்களுடனே காடு மலையெங்கும் சுற்றித் திரிந்தார். இவ்விதம் அலையும்போது ஒரு நாள் சாளக்கிராமத்தில் யானைக் கூட்டங்கள் நீராடின. அப்போது யானை வடிவிலிருந்த முனிவனுக்கு தீர்த்த மகிமையால் தனது முன்பிறவி ஞானம் வரலாயிற்று. தம் நிலையுணர்ந்த அந்தக் களிறு மிகவும் வாடி களிறினக் கூட்டங்களைத் துறந்து தனித்தேயோடி வனாந்திரங்களில் விழுந்து புரண்டு தனது கஜ உடலுடனே பல திவ்ய தேசங்கட்கும் சென்று இறைவனை வணங்கி வரும்போது ஒருநாள் கோதாவரியில் நீராட அங்கிருந்த மிருகண்டு முனிவரிடம் யானை தனது பாஷையில் தன் நிலைமையினைச் சொல்லி விமோச்சனம் வேண்ட அவர் சகல பாவத்தையும் தீர்க்கும் காஞ்சிபுரத்திற்கு செல் எனச் சொல்ல காஞ்சிபுரம் வந்த இந்தக் களிறு (முனிவர்) வரதராஜப்பெருமாளுக்கு தினந்தோறும் மலர்பறித்துச் சமர்ப்பித்து கைங்கர்யம் செய்து வந்தது. இவ்வித மிருக்கையில் ஒருநாள் மலர் பறிக்க வரும் வழியில் அட்ட புயக்கரத்தோனைக் கண்டு மயங்கி அன்று முதற்கொண்டு அவனுக்கே தனது மலர்க் கைங்கர்யத்தைச் செய்துகொண்டே வந்தது. இவ்விதம் 14000 மலர்கள் பறித்துச் சமர்ப்பித்ததாகக் கூறுவர். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு சமயம் மழை இல்லாமல் போக மலர் பறிக்க நெடுந்தொலைவு சென்ற யானை ஒரு குளத்தில் இறங்கி அங்கிருந்த மலர்களை பறிக்க, அதிலிருந்த முதலை யானையின் காலை கவ்வியது (ஆதிமூலமே என்று அன்று ஒரு கஜேந்திரன் அழைத்தது போலவே இந்த யானையும் திருமாலைக் கூவி அழைக்க அட்டபுயக்கரத்தோன் வந்து சக்கராயுதத்தால், முதலையின் தலையைக் கொய்ய, யானைக்கு சாபம் நீங்கியது. யானையாகிய மகாசந்தன் தனக்கு மோட்சம் வேண்டுமென பெருமாளைக் கேட்க அவரும் இம்முனிவருக்கு மோட்சம் நல்கினார். ‘தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள் கோள்முதலை துஞ்சர் குறித்தெறிந்த சக்கரத்தான் தான் முதலே நங்கட்குச் சார்வு’ மூன்றாந்திருவந்தாதி - 99 | என்று பேயாழ்வார் இந்நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். |