பக்கம் எண் :

289

     4) காளியுடன் வரப்பெற்ற நக்கரன் என்னும் அரக்கனைக்
கொல்வதற்காகவே எம்பெருமான் 8 கரங்களுடன் வடிவெடுத்ததாகவும்
கூறுவர்.

     5) திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம்.

     6) மணவாள மாமுனிகளும், சுவாமி தேசிகனும் மங்களாசாசனம் செய்த
ஸ்தலம்.

     7) அட்டபுயக்கரத்தான் கஜேந்திர மோட்சமளித்த நிகழ்ச்சியை தமக்கு
அப்படியே காட்ட வேண்டுமென இப்பெருமானைப் பேயாழ்வார்
வேண்டிக்கொள்ள அவ்விதமே அவருக்கு காட்சி கொடுத்ததாகவும் ஒரு
வரலாறு உண்டு.

     8) வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு
தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக்
கட்டினான் என்றும் அறியமுடிகிறது.
 

     ‘மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும்
          நீண்முடி மாலை வயிரமேகன்
     தன்வலிதன் புகழ் சூழ்ந்த கச்சி
          அட்ட புயகரத்து ஆதி தன்னை’

     என்ற திருமங்கையாழ்வாரின் பாடலாலும் இதை உணரலாம்.

     9) இங்கு வந்த சரபம் ஒன்று அட்டபுயக்கரத்தானைக் கண்டு அஞ்சி
சரண் அடைய அச்சரபத்தை நோக்கிய எம்பெருமான் இச்சன்னதியில் வாயு
மூலையில் உள்ளயாக சாலையைக் காக்குமாறு சொல்ல சரபேசன் என்ற
பெயரில் இன்றும் காவல் காப்பதாக ஐதீஹம்.

     10) இக்கோவிலில் அமைந்துள்ள வராகப் பெருமாள் சன்னதி
சக்கரவர்த்தி திருமகள் சன்னதி, புஷ்பவல்லித் தாயார் சன்னதி, ஆண்டாள்
சன்னதி ஆகியன காண்பதற்கும் பேரழகு பொருந்தியனவாகும்.

     11) இப்பெருமாள் தனது 8 கரங்களில் கொண்டுள்ள ஆயுதங்களை
திருமங்கையாழ்வார்,.
 

     ‘செம்பொனிலங்கு வலங்கை வாளி
          திண்சிலை தண்டொடு சங்க மொள்வாள்
     உம்பரிரு சுடராழியோடு
          கேடக மொன் மலர் பற்றியெற்றே’