பக்கம் எண் :

3

     போற்றித் துதித்தனர் வைணவர்கள். இந்நிகழ்வை நினைவுகூறும்
முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழா பகல்
பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம்
இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க
நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும்
நடந்துவருகிறது.

     துலுக்க நாச்சியாருக்கு எம்பெருமான் ஒருவனே புகலிடம். அவனின்றி
தனக்கு வேறு கதியில்லை என்ற (சரணாகதி பூண்ட) வைணவ சித்தி
விளைந்ததால் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்துத் தொழத்தக்கப் பெருமை
பெறுகிறார்.

     இதே போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்க்கோட்டை
திருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் இரண்டறக் கலந்த
துலுக்க நாச்சியாரின் வரலாறும் மேற்படி நிகழ்வோடு ஒப்பு
நோக்கத்தக்கதாகும்.

     3) சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் தீர்த்தவாரி
கொண்டாடப்படும் இரண்டு தினங்களில் முஸ்லீம்கள் திருப்பாவை பாடி
பரவசத்துடன் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியும் வைணவத்தில் சமய
வேறுபாடின்மையும் பரம்பொருள் ஒருவனே என்பதையும், சரணாகதியே
ஆத்மவிமோசனம் என்பதையும் தெளிவாக்குகிறது.

     4) அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்திலிருந்து வந்த கிறித்துவப்
பாதிரியார் திருவட்டாறு திவ்ய தேசத்தின் (திருவட்டாறு - மலைநாட்டுப்
பதிகளுள் ஒன்று) மாண்பினைப் புகழ்ந்து தனது பெயரை அனந்த சைதன்யர்
என்று மாற்றிக்கொண்டு அங்கேயே நெடுங்காலம் வாழ்ந்ததும்
எடுத்துக்காட்டத்தக்கதாகும்.

     5) சைவத் திருக்கோவில்களில் பெருமாள் எழுந்தருளியிருப்பதும்,
வைணவ திவ்ய தேசங்களில் சிவபிரானுக்கு சன்னிதிகள் இருப்பதும் சைவ-
வணவ ஒற்றுமை கருதி உண்டாக்கப்பட்டதாகக் கூறினாலும் வைணவத்தின்
கடவுளான விஷ்ணுவிடமிருந்து இவைகள் உண்டானவை என்ற தத்துவத்தைக்
காட்ட வந்ததேயாகும்.

     பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருக்குறுங்குடியில்
பெருமாளுக்கு பக்கத்தில் சிவனும் நிற்கிறார்.