இங்கு தினந்தோறும் வழிபாடு நடைபெறும்போது சிவனுக்கும் பூஜைகள் நடந்தேறி விட்டதா என்று கேட்கும் பாவனையில் இங்குள்ள ஜீயர் சுவாமிகள் “பக்கம் நின்ற பண்பர்க்கு குறையாதும் உளதோ” என்று வினவுவர். குறையொன்றுமில்லை என்று பட்டர்கள் பதில் மொழிவர். இந்தச் சுவையான நிகழ்ச்சி இன்றும் நடைபெறுவதைக் காணலாம். 6) இதேபோல் தொண்டை மண்டலதிவ்ய தேசங்களில் சமய வேறுபாடற்ற நிலைமை நிலவுவதையும், சோழநாட்டுத் திவ்யதேசமான திருக்கண்ணங்குடியில் ஒரு நாளில் பெருமாள் விபூதி அணிந்து வருதலையும், விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பினையும் இந்நூலில் பல ஸ்தலவரலாற்றுகளில் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளமை வைணவம் சாதி, சமய வேறுபாடுகட்கு அப்பாற்பட்டதென்பதை தெள்ளிதின் விளக்கும். இது போன்ற உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட வைணவ சம்பிரதாயத்தை விளக்கும் நூல்கள் சமீப காலம்வரை தமிழும், சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையிலேயே உள்ளன. இதனால் பாமர மக்களும், சாதாரணத் தமிழறிவு படைத்தோரும் மணிப்பிரவாள நடை கற்று மருண்டு மனம் வெதும்பி மயங்கி நிற்கும் நிலைமையைத்தான் அடைகின்றனரேயன்றி மனக்களிப்பு எய்த இயலவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்கள் தூய தமிழில் இருக்க அதற்கு உரை நூல்களோ சமஸ்கிருதம் கலந்த மணிப் பிரவாளத்தில் இருக்கின்றன. கற்றார் மட்டுமின்றி மற்றையோரும் அறியச் செய்ய தமிழில் வர வேண்டும் என்ற எண்ணமே இந்நூல் யாக்க முதல் கருவாக அமைந்தது. தொடர்ந்து பல திவ்ய தேசங்களை வரிசையாகத் தொழுகின்ற வாய்ப்பு கிட்டியபோது திவ்யதேசங்களின் வரலாற்றை எழுத வேண்டுமென்ற எண்ணம் இதயத்தூடே மலர்ந்து விரியலாயிற்று. எம் முன்னோர்கள் திரட்டி வைத்த நூல்களும், அவைகளில் எனக்கு அவ்வப்போது இருந்த அப்பியாசமும் இப்படியொரு நூலை எழுத வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியை, தீக்கொளிஇ வேக வைத்தது. இதன் தொடர்பாக திவ்யதேசங்கட்கு நேரில் சென்றும், அங்குள்ள ஸ்தல வரலாற்று சம்பந்தமான நூல்கள் மற்றும் இதர விஷயங்களைத் தொகுத்தும் வைணவக் கொள்கையில் படிந்து கற்றுத்துறை போய பெரியவர்களை நேரில் சந்தித்தும், வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் தொடர் பணியில் ஈடுபட்டும் சுமார் ஆறு ஆண்டுகட்கு முன் துவங்கிய இப்பணி 1993இல் நிறைவு பெற்றது. |