இந்நூலில் ஸ்தல வரலாற்றுத் தொடர்பான புராணக்கதைகளை கூறியுள்ள விடத்து அந்தந்த ஸ்தலத்திற்கு எவ்விதம் புராணத்தில் கூறப்பட்டுள்ளதோ அவ்விதம் அப்படியே கூறப்பட்டுள்ளது. பல ஸ்தலங்களின் வரலாற்றுகளில் பெருமாளை விட்டுப் பிராட்டி பிரிய, பிராட்டியைத் தேடி பெருமாள் வர என்ற உட்கருத்து இந்த ஜீவாத்மாவைக் காக்கும் பொறுப்பு, பரமாத்மாவுக்கு உரியதென்பதாலும், பிரிந்து வந்து ஜீவாத்மா மீண்டும் பரமாத்மாவை சேர்வதற்கான பரிணாம வளர்ச்சியைப் பெறுகின்ற பக்குவத்தை விளக்கும் பண்பாகவும் எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி வேறு விதமான கருத்துக் கொள்ளலாகாது. ஒரு முறை பிரிந்து சேர்ந்தபின் மீண்டும் ஏன் பிரிய வேண்டும், இவ்விதம் பலமுறை பிரிவதும் பலமுறை சேர்வதும் ஏன் என்றும் கேட்கக்கூடாது. பிரிவது ஜீவாத்மாவின் லட்சணம். பிரிந்ததை தேடி வருவது பரமாத்மாவின் லட்சணம். இது தொடர்ச்சங்கிலி விளைவு போன்று இடையறாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியாகும். இராமனை விட்டுப் பிரிந்த சீதையை பரமாத்மாவை விட்டுப் பிரிந்த ஜீவாத்மாவாகவும், ராமன் தேடிச்சென்றதை ஜீவாத்மாவை பரமாத்மா தேடிச் சென்ற லட்சணமாகவும், ராமன் வரும் வரை சீதை எண்ணற்ற இன்னல்களை அனுபவித்து பொறுமையின் கடலாக இருந்து வந்ததை சரணாகதித் தத்துவத்தை தலைமையாகக் கொண்ட (ஜீவாத்மா அடைகின்ற பரிணாம வளர்ச்சி) வைணவ லட்சணமாகக் கொள்ள வேண்டும். ஜீவாத்மா மாயையின் வலைப்பட்டு நிலை பிறழ்ந்து மாறிச்செல்லாமல் எம்பெருமானே அவ்வப்போது வந்து திருத்தி தன்னடிக்கீழ் சேர்த்துக் கொள்கிறான். இவ்வாறு ஜீவாத்மாவைக் கண்காணித்து அதற்கு காவலனாக வந்து ஜீவாத்மாவை ஈடேற்றவைப்பதால் திருத்திப் பணி கொள்வான் எந்தை என்று ஆழ்வார்கள் எம்பெருமானுக்கே ஆச்சார்ய லட்சணத்தை இலக்கணமாகக் காட்டியுள்ளனர். இந்நூலில் மார்க்கண்டேயர், பிருகு முனிவர், என்ற ஒரே பெயரைக் கொண்ட முனிவர்களின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் ஒரே முனிவர் எவ்விதம் பல காலங்களில் வாழ்ந்திருக்க முடியும் என்று வினவலாம். இரண்டிடங்களில் மார்க்கண்டேயர் என்று வந்தால் அந்த மார்க்கண்டேயர் வேறு, இந்த மார்க்கண்டேயர் வேறு என்று கொள்ள வேண்டும். ஆங்கிலத்திலோ அல்லது மேனாட்டு வழக்காற்றிலோ ஜேம்ஸ் 1, ஜேம்ஸ் 2 என்று குறிக்கப்படுவதுபோன்ற மரபு தொன்மையான |