பக்கம் எண் :

306

49. திரு நிலாத்திங்கள் துண்டம்

     நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
     ஊரகத்தாய் ஒண்துரை நீர் வெஃகாவுள்ளாய்
     உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
     காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
     காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
     பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
     பெருமானுன் திருவடியே பேணினேனே - (2059)
                     - திருநெடுந்தாண்டகம் - 8

     என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது. நிலா
வென்றாலும், திங்கள் என்றாலும் ஒன்றுதான். அவ்வாறிருந்தும் நிலாத்திங்கள்
துண்டத்தான் என்ற பெயர் எவ்வாருண்டாயிற்று என்று தெரியவில்லை.
திருமங்கையாழ்வார் சொற்றொடர் மங்களாசாசனமே வழங்கியுள்ளார்.
விவரங்கள் வேறு யாதும் கொடுக்கவில்லை. நிலாத் திங்கள் துண்டத்தான்
என்று வைணவச் சுவையிலிருந்து சற்றே மாறுபட்ட சொல்லைக் கொண்டவன்
இப்பெருமாள். அதுமட்டுமன்றி சைவக்கோவில்களுக்குள் மங்களாசாசனம்
செய்யப்பட்ட பெருமாள்கள் எழுந்தருளியிருக்கிறார்கள் என்றால் அது இங்கும்
காமாட்சியம்மன் கோவிலுமேயாகும்.

     இந்த இரண்டு தலங்களும் (திருநிலாத்திங்கள் துண்டம், திருக்கள்வனூர்)
எவ்வாறு சைவக் கோவில்களுக்குள் வந்தன என்பன தொல்லியல் மற்றும்
வரலாற்றடிப்படையில் ஆய்ந்து முடிவு செய்யப்பட வேண்டியதாகும்.
நிலாத்திங்கள் துண்டத்தான் கோவிலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலும்
எதிரெதிரேயான ஒரே சாயலில் இருந்த சமயம் சுற்று மதில் எழுப்பும்போது
இரண்டு கோவில்கட்கும் சேர்த்து சுற்றுமதில் எழுப்பப்பட்டுவிட்டதா, அல்லது
சைவ, வைணவ ஒற்றுமை கருதி சிவன் கோவிலுக்குள் ஒன்றுமாக உமையவள்
கோவிலுக்குள் ஒன்றுமாக மங்களாசாசனப் பெருமாள்கள் தேவை என்று கருதி
கொணரப்பட்டதா என்பது ஆய்ந்து அறிதற்குரியனவாகும்.

     இதே போன்று சோழநாட்டுத் திருப்பதிகளில் திருச்சித்ரக்கூடம், தில்லை
நடராஜன் சன்னதிக்குள் அமைந்துள்ளது. இருப்பினும் இவ்விரண்டு
ஸ்தலங்களின் அமைப்பையும் உற்று நோக்கினால் முன்னொரு காலத்தில்
இரண்டு ஸ்தலங்களும் தனித்தனியே அதே சமயம்