பக்கம் எண் :

332

     எனவே கள்வா என்னும் சொல் கார்வானத்துள்ளானைப் பற்றி
மட்டுமன்று என்று தலைக்கட்டலாம்.

     மேலும் மேற்கூறியது போல ஒரு சொல்லால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலங்கள் அனைத்தும் வைணவ இலட்சினைகளோடு
ஸ்ரீவைஷ்ணவ லட்சணமும் பெற்றுத் தணித்து நின்று மணங்கமழ்கின்றன.
ஆனால் இத்தலமோ, சிவஸ்தலமான காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்
உள்ளது. காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன் ஒரு மூலையில் (ஒரு
கம்பத்தில் உள்ள சிலை போல்) கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில்
நால்தோள் எந்தாயாக எழுந்தருளியிருக்கிறார்.

     எனவே திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கள்வன்
இவர்தானா என்று இந்த மங்களாசாசனத்தை பெரியோர்கள் பலர்
சந்தேகிக்கின்றனர்.

     இச்சந்தேகம் சரியானதேயாகும். திருக்கள்வனூர் என்பது யாது. கள்வா
என்று மங்களாசாசனம் செய்யப்பட்ட கள்வன் யார். கார்வானம் என்பது
யாண்டுளது என்று ஆய்ந்து கண்டறிதல் அவசியமாகிறது.

     வராஹச் சேஷத்திரங்கள்தான் திருமால் சேஷத்திரங்களில் மிகவும்
தொன்மை வாய்ந்ததாகும். முன்னொரு காலத்தில் நாடெங்கும் வராக ரூபியாய்
பெருமாள் எழுந்தருளின ஸ்தலங்களே திருமால் ஸ்தலங்களாகக்
கொள்ளப்பட்டன. திருமலை கூட முன்னொரு காலத்தில் வராகச்
சேஷத்திரமாகவே இலங்கியது. இந்தியாவின் பண்டைய வரலாற்றை உற்று
நோக்கினால் வராகமூர்த்தியாக திருமாலை வழிபட்டமை தெற்றன விளங்கும்.
எனவே ஆதிவராக மூர்த்தி என்னும் திருநாமம் கொண்ட இப்பெருமான்
எழுந்தருளியிருந்த தலம் வேறு எங்கோ மிகச் சிறப்பான செல்வச் செழிப்பான
இடத்தில் இருந்திருக்கலாமெனவும் காலப்போக்கில் அத்தலம் இருந்த இடத்தில்
பிற சமய ஆலயங்கள் உருவாகியமையாலோ அல்லது அந்த ஆதிவராஹர்
இருந்த தலம் இடர்ப்பாடுகளுக்கு உட்பட்டமையாலோ காஞ்சிக்கு இடம்
பெயர்ந்த இப்பெருமான் காமாட்சியம்மன் ஸ்தலம் இருந்த இடத்திற்கு
வந்திருக்கலாமென யூகிக்கலாம்.

    ஆழ்வார் மங்களாசாசனத்தினால் உண்டான பெயரே பிரபல்யமாகி
இருப்பதால் அதற்குமுன் ஆதிவராஹப் பெருமான் சன்னதி என்பதே
பிரசித்தமாகி இவ்விடத்து தனிச் சன்னதியாக இருந்திருக்க வேண்டும்.
பிற்காலத்தே காமாட்சியம்மன் கோவில் உருவான போது இன்றுள்ள நிலைமையை எய்திருக்கலாம்.