பக்கம் எண் :

337

     திரேதா யுகத்தில் ஸ்வேத வர்ணனாக வெண்ணிறம்
     கிரேதா யுகத்தில் ப்ரவேளச வர்ணனாக பவள நிறம்
     துவாபார யுகத்தில் மரகத வர்ணனாக பச்சை (மரகதம்) நிறம்
     கலியுகத்தில் ச்யாமள வர்ணனாக கருநீலம் -(மேகவர்ணம்)

     இந்த நான்கு வண்ணங்களுள் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும் என்று
எண்ணுகிறார். இங்கு என்ன நடந்தது. எவ்விதம் இவ்வண்ணம் வந்துற்றது
என்று எண்ணிப்பார்க்கும் போது பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி
கொடிய அரக்கர் கூட்டத்தை யனுப்பினாளே, அந்த அரக்கர்களை எல்லாம்
கொன்று குவித்து ரத்தக்களரியாக இவ்விடத்து நின்றாரே அந்த செம்மை
சேர்ந்த பவள வண்ணமல்லவா இதில் ஊடாடுகிறது என்று எண்ணி
பவளவண்ணர் என்று தலைக்கட்டி நின்றார்.

     கடல்மல்லையிலும், கச்சியூரிலும், திருப்பேர் நகரிலும்
திருஇடவெந்தையிலும் பாற்கடலிலும், திருப்பதியிலும் உள்ள
வண்ணங்களிலிருந்து வேறுபட்ட பவளவண்ணர் என்று முடிவு கட்டி பவள
வண்ணர் என்று மங்களாசாசித்தார்.

     இந்தப் பவளவண்ணர் கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள
காலாண்டார் தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார்
2 பர்லாங் தொலைவு.

வரலாறு

     காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு சிறப்பாய்
பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தேவி தொடர்ந்து
எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய
அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த
அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்து ரத்தம் தோய நின்றார் பெருமாள்.
இவ்வாறு ரத்தம் தோய ப்ரவாளேசராக, ப்ரவாளேச வண்ணராக நின்றதால்
ப்ரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்.

மூலவர்

     பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     பவள வல்லி தனிக்கோவில் நாச்சியார்

தீர்த்தம்

     சக்ர தீர்த்தம்