பக்கம் எண் :

362

     ஒரு காலத்தில் முட்டாளாயும், ஊமையாயுமிருந்த பிராம்மணன் ஒரு
அக்ரஹாரத்திலிருந்தான். எவ்விதமான ஆசார அனுட்டானம்
இல்லாதிருந்தாலும் ஒவ்வொரு அமாவாசைதோறும் திருஎவ்வுளுக்கு வந்து
பெருமாளை வழிபட்டு ஹ்ருத்தபாபநாசத்தில் நீராடுவதை மட்டும் முரட்டுப்
பிடிவாதமாக கொண்டிருந்தான். அவன் இறப்பதற்குச் சற்று நேரத்திற்குமுன்
பப்புளித் துப்பட்டியுடன் பெருமாள் வந்து என்னை அழைத்துக்கொண்டு
போகிறார் என்று வாய் பேசாதிருந்த ஊமை இரண்டு முறை கூச்சலிட்டு உயிர்
நீத்தான். எனவே இத்தலம் மோட்ச கதி கிட்டும் ஸ்தலமாக விளங்குகிறது.

     8. ஒரு சமயம் சிவனையழைக்காது தட்சன் யாகம் செய்ய அவனுக்குப்
புத்திமதிகூறி திருத்துவதற்காகச் சென்ற உமையவள் எவ்வளவு புத்திமதி
கூறியும் பயனில்லாது போயிற்று. இதனால் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரும்
போராட்டம் உண்டாகி பின்பு சினந்தணிந்த சிவன் தனது நெற்றியின்
வியர்வைத் துளிகளிலிருந்து தோன்றிய வீரபுத்திரனை ஏவி யாக
குண்டலினியையும் தட்சனையும் அழித்தான். பிரம்மவித்தான தட்சனைக்
கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் சிவன்முன் வந்து நின்றது. அது அவனை
விடாது பின் தொடரவே அதனின்று மீள்வதற்கு எவ்வளவோ முயன்றும்
இறுதியில் இவ்விடம் வந்து சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற
வரலாறும் உண்டு. இன்றும் தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
திரிசித்தபடி ருத்ரன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.

     9. மது கைடபன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத்
தொழில் ரகஸ்யத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலை
வேண்ட பயங்கர ரூபங்கொண்ட இவ்விருவரையும் திருமால்
துவம்சம்ப்படுத்தினார். அவர்கள் தமது பராக்கிரமத்தால் சூர்ய சந்திரர்களின்
ஒளியையும் மறைத்து உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான்
அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ அதன்முன் நிற்க முடியாமல் இருவரும்
ஓடியொழிந்தார்கள். (இக்கதை பாண்டிநாட்டு திருப்பதிகளுள் ஒன்றான
வானமாமலை என்னும் திருச்சீரிவரமங்கை ஸ்தலத்திற்கும் சொல்லப்பட்டுள்ளது)