பக்கம் எண் :

363

     அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் உற்ருத்த பாப நாசினி
என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். தாம்
கிடப்பதற்கு உள் ஆதி இருந்த இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான்
சினந்தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.

     10. பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில்தேவ பாகர் என்னும்
முனிவர் ஒருவர் இருந்தார். அவர் மார்க்கண்டேய முனிவரையணுகி சகல
பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும் மோட்சத்தையும் தரக் கூடிய
பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்தலம் யாதென வினவ அவர் தேவபாகரை
இத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறி இங்கு ஆற்றுப்படுத்தியதாகவும்
புராணங்கூறும்.

     11. கௌசிகன் என்னும் அந்தணன் ஒருவன் சகல புண்ணிய
தீர்த்தங்களிலும் நீராட யாத்திரை புறப்பட்டு நெடுங்காலம் அவ்விதமே திரிந்து
தண்டகாரண்யத்தின் மத்திய பிரதேசத்தை அடைந்தான். அங்கு உணவின்றி
வாடி பசியால் மிக்க களைப்புற்றுச் சோர்ந்துபோனபோது அவ்வழியே சென்ற
சண்டாளன் ஒருவனைக் கண்டு அவனிடம் தனக்கு உணவளிக்குமாறு
வேண்டினான். இப்பிராமணனின் முகத்திலிருந்த ஒளியைக் கண்ட அவன் தன்
தோள் மீது ஏற்றிச் சென்று கௌசிகனுக்கு உணவளித்தான். அயர்ந்து தூங்கிய
கௌசிகனுக்குப் பணவிடைகள் செய்யுமாறு தன் புத்திரியை அனுப்பினான்.
அவளது பணிவிடைகளில் தன்நிலை மறந்த கௌசிகன் பலகாலம் அவளுடனே
தங்கியிருந்து இன்புற்றிருந்தான்.

     பிறகு ஒரு நாள் தன் நிலையுணர்ந்த கௌசிகன் மீண்டும் தீர்த்த
யாத்திரை தொடங்கி தனது கிழப்பருவ நிலையில் இங்குள்ள ஹ்ருத்த பாப
நாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தெய்வாதீனமாய்த் தை
அமாவாசையாயிற்று. இவனை யமலோகத்திற்கு இட்டுச் சென்ற யமதூதர்கள்
இவன் பாபச் செயல்களின் பொருட்டே இவனை இங்கு கொணர்ந்தோம் எனக்
கூறினார். இதைக் கேட்டு நகைத்த எமன் இவன் தை அமாவாசையன்று
ஹ்ருத்த பாப நாசினியிலில் நீராடியதால் இவனுக்கு பாபங்களே இல்லை.
இவனை மோட்சவாயிலில் கொண்டு சென்றுவிட்டுவாருங்கள் என்று
உத்திரவிட்டான்.