பக்கம் எண் :

367

     ஆ) மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர்
விரும்பிய வண்ணம் ராமனாக இத்தலத்து எழுந்தருளினார். சீதை, இலக்குவன்,
பரத சத்ருக்கணரும் பின் தொடர்ந்தனர்.

     இ) சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்குகந்து கஜேந்திரவரதர்
கோலத்தில் இங்கு காட்சி தந்தார்.

     ஈ) சுமதி என்னும் மன்னனின் விருப்பதிற்கிசைந்து வேங்கட
கிருஷ்ணனாய் அவதாரம் செய்தார்.

     உ) திருமாலுடன் ஊடல் கொண்ட திருமகள் வைகுண்டத்தை விட்டுப்
பிரிந்து இவ்விடத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த பிருகு மகரிஷியின்
குடிசைக்கருகில் குழந்தையாய் உருவாகி நிற்க, வேதங்களில் கூறப்பட்ட
தேவமகள் இவளேயென உணர்ந்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவர
தக்க பருவம் வந்ததும், ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளை
ஏற்றுக்கொண்டார். திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே மந்நாதர் (என்
கணவர்) என்றுரைத்ததால் மந்நாதர் என்ற பெயரும் உண்டு.
 

     எனவே திருமணக் கோலத்திலான ரங்கநாதராக
     (மந்நாதர்) இத்தலத்து எழுந்தருளினார்

     இவ்விதம் ஐந்து மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியிருப்பது. இந்த ஒரு
திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

     2. திருமலை வெங்கடேசனே வேங்கட கிருஷ்ணனாக
எழுந்தருளியிருப்பதால் இரண்டாவது திருப்பதி என்றழைக்கிறார்கள். புரட்டாசி
சனிக்கிழமைகள் திருப்பதியைப் போல் இங்கும் விசேடம்.

     3. கண்ணன் அர்ஜு னனுக்குத் தேரோட்டியாக இருந்து பீஷ்மர் விட்ட
அம்புகளை அர்ஜு னனுக்காக ஏற்றுக் கொண்டதை காண்பிக்க இன்றைக்கும்
ஸ்ரீபார்த்தசாரதி (உற்சவர்) திருமுகத்தில் வடுக்களைக் காணலாம்.

     4. வைணவத் தலங்களில் முக்கிய மூன்றான வேங்கடம், அரங்கம், கச்சி
என்ற முத்தலத்துப் பெருமாள்களும் இங்குள்ளது ஒரு சிறப்பு.