| சடாரி, பரிவட்டம் போன்றன கொடுத்து எமக்கும் மடலுரைக்கலாகாதோ வென்றாராம். அதற்கு திருமங்கை யாழ்வார் மிகவும் பக்தியோடு வாய்புதைத்து நின்று மதில் இங்கே மடல் அங்கே என்றாராம். 8) வைணவ வளர்ச்சிக்கும், வைணவ மறுமலர்ச்சிக்கும் இத்திருவரங்கம் ஒரு பாசறையாக விளங்கியதென்றால் அது மிகையல்ல. ஆம் முதல்வன் இவன் என்று இராமானுஜரை அடையாளங்காட்டிய ஆளவந்தார் வைணவத் தலைமையேற்று இங்கிருந்து ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. வ்யாக்யான சக்ரவர்த்தி என்னும் வைணவக் கடலும், பிள்ளை உலகாசரியன் என்னும் வைணவ மேதாவியும் இங்கு நெடுங்காலம் தங்கியிருந்து வைணவம் வளர்த்தனர். ஸ்ரீராமானுஜர் திருவரங்க கோவிலின் நிர்வாகத்தை ஏற்று ஸ்ரீரங்க ஜீயராக இருந்து திருக்கோவில் நிர்வாக பரிபாலனம் பண்ணி விசிஷ்டாத்வைதத்தை உலகுக்கு அளித்த இடம். திருவரங்கப் பெருமாளுக்குரிய ஆபரணங்கள் முதற்கொண்டு அன்றாடம் அரங்கனுக்கு அணிவிக்க வேண்டிய ஆடைகள், பிரசாதம், விழாக்கால நடைமுறைகள் போன்றவற்றை முறைப்படுத்தி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார். இதனை திருவரங்கர் செல்வம் முற்றுந்திருத்தி என்ற அடைமொழியில் குறிப்பார். இவ்வொழுக்கு இராமானுஜருக்குப் பின்னால் இஸ்லாமியர்களின் படையெடுப்பு வரையில் பெரிதும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. 9) திவ்யதேசங்களில் தமிழ்ப்பாசுரங்களை இசையோடு இசைத்து முன் செல்ல, அதனைச் செவிமடுத்தவண்ணம் பெருமாள் பின்னே வர, தமிழ் முன் செலத்திருமால் பின்வர என்று தமிழ் பிரபந்தங்கட்கு முன்னுரிமை கொடுத்து சீர்திருத்தம் செய்து இராமானுஜர் இங்கு நெடுங்காலம் இருந்தார். இங்கு நடந்த இராமானுஜ வைபவங்களைப் பற்றி பெரிய நூலொன்றே யாத்து விடலாம். இறுதியில் இராமானுஜர் திருநாடு (மோட்சம்) அடைந்ததும் ரங்கநாதனே அவரை வஸந்த மண்டபத்தில் வைக்குமாறு பணிக்க இன்றும் அவரது திருமேனியை தரிசிக்கும் இத்தகைய கீர்த்தி வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை. 10) இங்கு எல்லாமே பெரியவைகள். ஆம் கோவில் பெரிது. இராமபிரானே நமக்குப் பெருமாள் ஆவார். அவரால் தொழப்பட்ட இந்த ரங்கநாதன் பெரிய பெருமாள். |