என்னும் பெயரால் சுட்டவில்லை. பாற்கடல் என்றே தெளிவாக குறிப்பிடுவதும் ஈண்டு நோக்கத்தக்கது. திருமங்கையாழ்வார் இப்பாசுரத்தில் நீர்ப்பாயல் என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளதை இத்தலத்திற்கான மங்களாசாசனமாகவும் கொள்ளலாம். ஆயின் முன்னோர்கள் இதை திருப்பாற்கடலுக்கான மங்களாசாசனமாக எடுத்தாண்டுள்ளனர். நீர்ப்பாயல் என்னும் சொல்லால் இங்குள்ள சலசயனப் பெருமாளைத் திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளதாக கொள்ளலாமென்பதே அடியேன் கருத்து. 3) சீன யாத்ரீகன் யுவான் சுவாங் தனது வரலாற்றுக் குறிப்பு நூலில் மாமல்லையின் எல்லைகளைக் கூறிப் போந்துள்ளான். 4) இங்குள்ள ஆதிவராகர் கோவில், மும்மூர்த்தி மண்டபம், பாண்டவர் ரதங்கள், அர்ஜூனன் தவம், கண்ணபிரானின் கவின்மிகு லீலா விநோதக் காட்சிகள், தசாவதாரக் காட்சிகள், இராமானுஜர் மண்டபம், திரௌபதி தேர், திருமாலின் சயன திருக்கோலங்கள் நின்ற, அமர்ந்த திருக்கோலங்கள் என்று எங்கு காணினும் விஷ்ணுவின் காட்சிகளும், இலட்சினைகளும், வைணவம் எத்துனை யாழமாக வேரூன்றி தழைத்துப் பரவி விரவியிருந்ததை எண்ணிப் பார்க்கும்போது நெஞ்சு விம்முகிறது. 5) பல்லவ மன்னர்கள் வைணவர்கள், வைணவம் பரப்பும் வீரர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர். இங்கு சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது பக்தியின் அடையாளமாக ஆதிவராகர் குகைக் கோவில் அமைத்தான். இக்கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீசிம்மவிஷ்ணு போத்தாதி ராஜன் என்று பல்லவ கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சிம்ம விஷ்ணுவுக்கு எதிரே அவனது மகன் மகேந்திர வர்மனுக்கும் இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வராக மண்டபம் மும்மூர்த்தி மண்டபம் போன்றன சிம்ம விஷ்ணுவால் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னர்கள் தங்களுக்கு தூய வைணவ பெயர்களையே வைத்துக்கொண்டனர் என்பதற்கு இதுவே சான்று. 6) ஆதிவராக மண்டபம் என்றும் ஒரு மண்டபம் இங்குள்ளது. இது இங்குள்ள மகிசாசுர மர்த்தினிக் குகையிலிருந்து தெற்கே உள்ளது. குகை மேற்கு நோக்கிய அமைப்பு. இதன் நடுவில் உள்ள கருவறையில் வராக மூர்த்தி உள்ளார். |