கல்வெட்டுக்களில் இக்கோவில் (ஆதிவராக மண்டபம்) பரமேச்சுர மகா வராஹ விஷ்ணுக் கிரஹம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. திருமாலின் 10 அவதாரங்களைக் குறிக்கும் கல்வெட்டும் இங்குள்ளது. 7) பூதத்தாழ்வார் அவதாரம் செய்தது இங்குதான். இவரைக் குறித்து திருக்குருகைப் பிரான் பிள்ளான் என் பிறவிதீர இறைஞ்சினேன் இன்னமுத அன்பே தகளி அளித்தானை - நன்புகழ்சேர் சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லை பூதத்தார் பொன் அம் கழல். | என்று கடல் மல்லையையும் சேர்த்துக் குறிக்கிறார். 8) ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகவும் அவைகள் கடல் கோளால் அழிக்கப்பட்டுவிட்டன வென்றும் அப்போது இந்நகரத்திற்கு 7 கோயில் நகரம் என்னும் பெயர் விளங்கியதாகவும் அறிய முடிகிறது. இதன்பின் பல்லவ மன்னன் ராஜ சிம்மன் காலத்தில் கடற்கரையில் 3 கோவில்கள் எழுப்பப்பட்டன. இக்கோயில்களின் அமைப்பைக் கண்டு சோழமன்னன் ராஜராஜ சோழன் வியந்து போற்றியுள்ளான். இதிலும் 2 கோவில்கள் கடல் வெள்ளத்தில் அழிந்து விட்டன. அக்கோயில் குறித்து இரண்டு பலி பீடங்களும் ஒரு கொடி மரமும் இன்றும் இருக்கின்றன. அழியாத ஒரு கோவில் இன்றும் கடல்வயப்பட்டே உள்ளது. சுற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டு கடல் அலைகள் கோவிலின் மதிற்சுவர்களில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் சலசயனப் பெருமாளாகக் கொள்ளும் ஒரு கருத்தும் உண்டு. இந்தக் கோவிலில் தற்போது திருவாராதன வழிபாடுகள் இல்லை. இப்பெருமானைச் சேவிக்கும் போது இக்கோவில் அமைந்துள்ள சூழ்நிலையும் அலைமுழங்கும் திருப்பாற்கடல் நாதனையே சேவிக்கும் உணர்வைத் தரும். கடலுக்குள் அமிழ்ந்த கோவிலில் இருந்த பெருமாளைக் கொணர்ந்து கடற்கரைக்குச் சற்றுத் தொலைவில் ஊருக்குள் அமைத்துள்ளனர். இங்கு பள்ளி கொண்ட நிலையில் உள்ள பெருமாளுக்கே ஸ்தல சயனத் துறைவார் என்பது திருநாமம். இக்கோவில் தான் மங்களாசாசனம் செய்யப்படட திவ்யதேசமாகும். இதுதான் தல சயனமாகும். சிலர் இரண்டு கோவில்களும் (அதாவது சலசயனம், தல சயனம்) மங்களாசாசனம் என்று கூறுவர். |