இருப்பினும் தற்போது பெயர் பெற்றிருப்பது ஊருக்குள் அமைந்திருக்கும் தலசயனப் பெருமாள் கோவில் மட்டுமே. இங்கு வழங்கப்படும் சலசயனம், தலசயனம் என்னும் இரண்டு சொற்களும், இரண்டு கோவில்களும் விரிவாக ஆராயத்தக்கது ஆகும். 9) இங்கு ஸ்தல சயனப்பெருமாள் கோவில் அமைவதற்கு முன்பே சுமார் ஒரு யுகத்திற்கு முன்பிருந்தே ஆதிவராஹப் பெருமாள் கோவில் என்று ஒரு கோவில் இருந்தது. இப்போதும் அந்தத் தலம் இங்குள்ள கலங்கரை விளக்கத்திற்குச் செல்லும் பாதையின் ஓர் பால் அமைந்துள்ளது. ஏனத்துருவில் என்று திருமங்கையாழ்வார் இந்தப் பெருமாளையும் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்தக் கடன் மல்லையில் ஹரிகேச வர்மன் என்னும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் தினந்தோறும் இங்கிருந்து சுமார் 12 மைல் தூரமுள்ள திருஇடவெந்தை (திருவடந்தை) சென்று நித்ய கல்யாணப்பெருமாள் ஆதிவராக மூர்த்தியை சேவித்துவிட்டு ஊருக்குத் திரும்பி திருவாராதனம் முடித்துவிட்டு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இவனது பக்தியை மெச்சிய பெருமாள் இவன் பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணி ஒரு நாள் திருவடந்தை பூமிப் பிராட்டியைச் சிறுபெண்ணாக்கி அழைத்துக் கொண்டு ஒரு முதியவர் வேடத்தில் மாமல்லைக்கு வந்தார். அப்போது திருவடந்தை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்த ஹரி கேசவர்ம மன்னனிடம் பசிக்கு உணவு கேட்க, மன்னனோ தான் திருவடந்தை சென்று எம்பெருமானைச் சேவித்து விட்டுத் தான் உமது பசி தீர்க்க இயலும் என்று சொல்ல அதுவரை பசி பொறுக்க இயலாது என் பசிப்பிணி தீர்த்துப் போ என்று பெருமாள் சொல்ல, சற்றே யோசித்த மன்னன் இந்தக் கிழவனையே திருவடந்தைப் பெருமாளாக நினைத்துக் கொண்டு திருவாராதனைக் கிரமத்தில் ஈடுபட்டு உணவு எடுத்து வரும் வேளையில் முதியவரான இந்த வராகப் பெருமாள் தேவியை தனது வலப்பாகத்தில் வைத்து (வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையையும் பல்லாண்டு என்னுமாப் போலே) ஹரிகேச வர்மனுக்கு காட்சி கொடுத்தார். திருவடந்தையில் 365 கன்னியரை ஒரு கன்னிகையாக்கித் தன் இடபாகத்தி லேற்றார் இங்கோ தன் வலப் பாகத்தே வைத்து காட்சி கொடுத்து ஞான உபதேசம் செய்தார். |