சிறப்புக்கள் 1) சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர் வந்தது. கடிகை - நாழிகை அசலம் - மலை எனவே கடிகாசலமானது. 2) இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும். 3) தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது. 4) சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர். 5) சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது. |