| ஒதுக்கிவிட்டு திருமதில் வளைத்தார். இஃதறிந்த தொண்டரடிப் பொடியாழ்வார் மலர் கொய்யும்போது தமது ஆயுதத்திற்கு திருமங்கையின் பட்டப் பெயர்களுள் ஒன்றான “அருள்மாரி” என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். 13) திருவரங்கத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் ரசனை பொருந்திய ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவில் உற்சவத்தின் 6வது தினத்தில் திருவரங்கன் உறையூர் சென்று கமலவல்லி நாச்சியாரைக் கடிமணம் புரிந்து கொள்கிறார். பிறகு 9வது தினத்தில் மீண்டும் ஸ்ரீரங்க நாச்சியாரைக் காண ஸ்ரீரங்கம் திரும்புவார். மூன்று நாட்களாக உறையூர் செல்வியோடு இருந்துவிட்டு வந்ததையெண்ணி ஸ்ரீரங்க நாச்சியார் பிணக்கு கொண்டு என்னைப் பார்க்க வரக்கூடாது என்று திருக்கதவும் சாத்துவாள். இந்தப் பிணக்கிற்கு “ப்ரணய கலஹம்” என்று பெயர். இந்தப் பிணக்கைத் தீர்த்து வைக்க நம்மாழ்வார் வந்து சமாதானம் செய்துவைப்பார். அதன்பின் இருவரும் சமாதானமுற்று ஒரு சேர்த்தியில் காட்சியளிப்பர். இத்திருநாளன்று தாயாருக்காக வாதிடுபவர்கள் 5வது திருச்சுற்றில் உள்ள பிரதானமான வாசற்கதவை அடைத்து விடுவார்கள். அரையர்கள் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் நடுவராக இருந்து தூது செல்வர். அப்போது பழம், பூ, முதலியவற்றை வீசுவதும் (பிராட்டி கோபமுற்று பெருமாள் மீது வீசிவிட்டு கதவடைத்துக் கொள்வதாக ஐதீஹம்) அரையர்கள் ஒருவர் மாட்டு ஒருவர் பேசி பிணக்கு தீர்ந்து சமாதானம் ஆகியுள்ளனர். என்று தெரிவிப்பர். இதன்பிறகு பெருமாளும் பிராட்டியும் ஒருசேரக் காட்சியளிப்பர். இதற்கடுத்தநாள் இருவரும் ஒரே ரதத்தில் திருவீதி உலாவருவர். இந்த ரதத்திற்கும் “கோரதம்” என்று பெயர். என்னே அரங்கனின் மாண்பு, ஆழ்வார்களின் பிணைப்பு. ஆம் நம்மாழ்வார் சமாதானம் செய்து வைக்கிறார். தொண்டரடிப்பொடி திருமாலை கட்டித் தருகிறார். திருமங்கை மண்டபமும் மதிலும் கட்டித் தருகிறார். பெரியாழ்வார் பெண்டு கொடுத்து மாமனாகிறார். ஆண்டாள் மனையாட்டி ஆகிறாள். திருப்பாணாழ்வார் திருவடிகளில் சேர்த்தியாகிறார். |