பக்கம் எண் :

404

     உய்வேன் என்று குறிப்பிட்டது இந்த பெருமாளைத்தான் பத்துப்
பாக்களாலும் வித்துவக் கோட்டம்மானே, வித்துவக் கோட்டம்மானே என்று
உயரிய உவமான நயங்களில் பாடியிருப்பது எண்ணியெண்ணி
மகிழ்தற்குரியதாகும்.

     4. திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது
முக்கண்ணன் மற்ற தேவதாந்தங்கள் போல் ஸ்ரீமந் நாராயணனின் உடலின்
அங்கமே என்று நீரூபிப்பதைப் போல அமைந்துள்ளது.

     இது பிற்காலத்தே செய்யப்பட்ட ஏற்பாடென்றும் கூறுவர். இருப்பினும்
திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக திவ்ய
தேசங்களில் 10க்கு மேற்பட்ட தலங்களில் உண்டு. இரு மூர்த்திகளும் கிழக்கு
நோக்கி அமர்ந்த திருக்கோலம்.

     5. அம்பரீஷ சக்ரவர்த்தி பரமபதநாதனின் வ்யூக அவதாரத்தை சேவிக்க
வேண்டுமென்று எம்பெருமானை இவ்விடத்திலிருந்து பிரார்த்திக்க
எம்பெருமான் நான்கு வடிவங்கொண்டு (வ்யூக வடிவத்தை) அவனுக்கு காட்சி
கொடுத்து முக்தியும் கொடுத்தார். இதனால்தான் நாலுமூர்த்தி கோவில் என்னும்
பெயர், இத்தலத்திற்கு உண்டானதென்றும் பிற்காலத்தே பஞ்ச பாண்டவர்களின்
தொடர்பால் இத்தலத்தின் பிரசித்தி உயர்வடைந்ததென்றும் கூறுவர்.

     நடுவில் இருக்கும் மூர்த்தியை தருமனும், மேற்கில் உள்ள மூர்த்தியை
அர்ஜு னனும், இடப்புறம் உள்ள மூர்த்தியை பீமனும், வலப்புறம் உள்ள
மூர்த்தியை நகுல சகாதேவர்கள் பூஜை செய்ததாகவும் வரலாறு.

     பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது
ஆய்வாளர்களின் முடிவும் கூட.