67. திருகாட்கரை
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே (3614) - திருவாய்மொழி 9-6-3 |
செழுமை நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காட்கரையில்
எழுந்தருளியுள்ள எம்பெருமான் தனது நீர்மை குணத்தினால் என் நெஞ்சில்
வந்து புகுந்து எனக்கு உயிராய் நின்றான். என் உயிரையும் உண்டான். இந்த
வஞ்சகக் கள்வனின் மாயங்களை நான் அறிகிலேனே என்று நம்மாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் மலையாளத்தில் காக்கரா என்று
வழங்கப்படுகிறது.
இத்தலம் ஷோரனூர் - எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள
இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 2 மைல்
தொலைவில் உள்ளது.
ஆலவாய், திருச்சூர் ரயில் மார்க்கத்தில் உள்ள இருஞாலக்கொடி
புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 9 மைல் தூரம். ஆலவாயிலிருந்து
பேருந்தும் உண்டு.
வரலாறு
இப்பெருமானை மலையாளத்தில் வாமன மூர்த்தி என்று அழைத்து
வழிபடுகின்றனர். இந்த வாமன மூர்த்தி திருக்கோயில் கொண்டுள்ள இடமே
திருக்காக்கரா. திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி
வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து
குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதா, பத்ம
ஹஸ்தங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு
எழுந்தருளியுள்ளார்.
திருமால் மூவடிமண்வேண்டி ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து
மூன்றாவதடியை மாவலியின் தலையில் வைக்க எத்தணித்ததும் வந்திருப்பது
சாட்சாத் மஹாவிஷ்ணுவே என்றறிந்த மாவலி எம்பெருமானைத் துதித்து ஒரு
வரம் கேட்டான். அதாவது நான் ஆண்டுக்கு ஒரு முறை உலக மக்களைச்
சந்திக்க விரும்புகிறேன். அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான்.
அவ்வாறாயின் இன்றைய தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக்