பக்கம் எண் :

407

     மண்டபத்தில் தென்பக்கம் யட்ச பிரதிஷ்டை காணப்படுகிறது.
வடகிழக்கில் கோபால கிருஷ்ணன் சன்னதியுள்ளது. தென்மேற்கு மூலையில்
அமைந்துள்ள நாகப்பிரதிஷ்டைகளும் கண்ணோடு கருத்தைக் கவர்வனவாகும்.
வெளிப்பிரகாரத்தின் தென்புறத்தில் மிகப்பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.
காற்றில் இதன் இலைகள் சலசலப்பது அதன் தெய்வீக அமைதிக்கு மேலும்
புனிதம் காட்டுவதாக அமைந்துள்ளது.

     4. இத்தலத்தில் ஒரு தனிகன் வாழை மரங்களை நட்டுப் பயிர்
செய்ததாகவும், அவைகள் குலை தள்ளாமல் தொடர்ந்து அழிந்து பட்டே
போக அத்தனிகன் பொன் வாழைக்குலைகள் செய்து அப்பனுக்குச் சமர்ப்பிக்க
எம்பெருமானின் திருவருளால் வாழை மரங்கள் வளர்ந்து வாழைகள் குலை
தள்ளியதாகவும், எம்பெருமானிடம் நேர்ந்து இந்த வாழைப்பழங்கள்
உருவானமையால் இதற்கு நேத்திரம் வாழைப்பழம் என்ற
பெயருண்டாயிற்றென்றும் கூறுவர்.

     இந்த தனிகன் சமர்ப்பித்த பொன் வாழைக்குலை ஒரு சமயம் காணாமல்
போய்விட்டது. மன்னன் பலரையும் பிடித்து விசாரித்தார். அவ்வாறு விசாரித்து
வருகையில் ஒரு யோகியைத் தீர விசாரிக்காமல் மிகவும் துன்புறுத்தியதாகவும்,
அந்நிலையில் அந்தப் பொன் வாழைக்குலை கர்ப்பக் கிரஹத்திற்குள்ளேயே
இருந்ததாகவும், கண்டறியப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட பிறகு, தன்னை
மிகவும் இம்சை படுத்தியதைப் பொறுக்க முடியாத அந்தத் துறவி, சாபம்
இட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உயிர்துறக்க, அந்தச் சாபம்
நீங்குவதற்காக, பல முனிவர்களின் கருத்துப்படி மூங்கில் கூரை ஒன்றை
உருவாக்கி, அதனுள் கோரைப் புற்களையிட்டுத் தீயை உண்டாக்கி பலநாள்
எரித்து வெளிச்சத்தை உண்டாக்கி சாபம் தீர்க்கப்பட்டதாக வரலாறுண்டு.

     5. நம்மாழ்வார் மட்டும் பதினொன்று பாக்களில் மங்களாசாசனம்.

     6. அப்பன், என்றும் பெருஞ்செல்வ நாயகி என்றும் இப்பெருமாளுக்கும்,
பிராட்டிக்கும் மலையாள மண்ணில் தூய தமிழ்ப்பெயர்கள் இலங்குகின்றன.