பக்கம் எண் :

418

70. திருக்கடித்தானம்

     கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
     கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
     கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
     கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே. (3506)
                           திருவாய்மொழி 8-6-5

     திருக்கடித்தானத்தில் கோயில் கொண்டான். என் நெஞ்சிலும் கோயில்
கொண்டான். எல்லாத் தெய்வங்களும் தொழுவதற்காக வைகுந்தத்தில் கோயில்
கொண்டான் என்று நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம்
கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் உள்ள செங்கணாச்சேரி
என்ற ஊரில் இருந்து கிழக்கு திசையில் இரண்டு மைல் தொலைவில் உள்ளது.

     தற்போது கோட்டயத்திலிருந்து திருக்கடித்தானம் வழியாக பிற
ஊர்களுக்குச் செல்லும் நகரப்பேருந்துகளும் உள்ளது. இவைகள் அடிக்கடி
இல்லாமல் ஒரு மணிநேரம் இடைவிட்ட கால அளவில் இருப்பதால்
கோட்டயத்திலிருந்து செங்கணாச்சேரி வந்து அங்கிருந்து நடந்துகூட சென்று
விடலாம்.

வரலாறு

     கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108
வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள்
விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப்
பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், இத்திருக்கடித்தானமும் ஒன்று.

     அஃதாவது கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24
நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய
சித்தியும் மோட்சமும் கிட்டும் என்பது ஐதீஹம்.

     இப்பகுதி வாழ் மக்கள் திருக்கடித்தானம் என்றும், திருக்கொடித்தானம்
என்றும் இத்தலத்தை விளிக்கின்றனர். இத்தலம் பற்றிய செய்திகள் சேகரிப்பது
மற்றத் தலங்களைவிடச் சற்றுக் கடினமானதாய் இருந்தது. முரண்பட்ட
கருத்துக்களையே இப்பகுதி மக்களிடமும், கோவில் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளிடமிருந்தும் பெற முடிந்தது.