பக்கம் எண் :

419

     ருக்மாங்கதன் என்ற சூர்ய வம்சத்து மன்னன் ஆட்சி செய்த
இடமென்றும் இவனது நந்த வனத்தில் பூத்திருந்த மிக அழகான புஷ்பங்களை
யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று எம்பெருமானுக்கு
சூட்டி மகிழ்ந்தனர் என்றும், இவ்வாறு மலர்கள் மறைவதை அறிய முற்பட்ட
மன்னன் தன் தபோவலிமையால் தேவர்களையும் தேவ மகளிர்களையும்
மலர்கொய்ய வந்த விடத்து பிடித்துக்கொள்ள, தேவர்கள் விண்ணுலகம்
(தேவருலகம்) செல்ல இயலாத நிலை ஏற்பட இதற்குப் பிராயச்சித்தம் கோரி
நிற்க, ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும்
பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்கட்குக் கொடுத்தால்தான்
அவர்கள் மீண்டும் தேவருலகம் செல்ல முடியுமென்று அசரீரி ஒலித்தது.

     அதுபோலவே ருக்மாங்கத மன்னன் தேவர்களை அழைத்து வந்து
இத்தலத்து எம்பெருமான் முன்னே நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின்
பலனை அவர்கட்கு கொடுக்கவே அவர்கள் தேவருலகெய்தினார்.

     நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்)
நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.

     ஆனால் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் ருக்மாங்கதன்
சரித்திரம் நடந்தது வடநாட்டில் என்பது பிரசித்தம். ஆயின் தென்னாடு பெற்ற
மலை நாட்டின் பதிகளுள் திருக்கடித்தானத்திற்கு இக்கதை தொடர்பு படுத்திக்
கூறப்படுகிறது என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.

மூலவர்

     அற்புத நாராயணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     கற்பகவல்லி

தீர்த்தம்

     பூமி தீர்த்தம்

விமானம்

     புண்யகோடி விமானம்

காட்சி கண்டவர்கள்

     ருக்மாங்கதன், தேவர்கள்