பக்கம் எண் :

424

தவமிருந்ததையும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தை தர்மன்
புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தர்மனே
பிரதிஷ்டை செய்தாரென இங்கு வழங்கப்படுகிறது.

     தர்மபுத்திரன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம்
பெரிதும் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே
குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்று அவர்கட்கு
தந்தை யொப்பத் திகழ்ந்த திருமால் இவ்விடத்து அவர்கட்கு காட்சி
கொடுத்ததால் “இமையவரப்பன்” என்ற திருநாமம் இவ்விடத்து
எம்பெருமானுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறிய
முடிகிறது.

மூலவர்

     இமையவரப்பன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     செங்கமலவல்லி

தீர்த்தம்

     சிற்றாறு

விமானம்

     ஜெகஜோதி விமானம்

காட்சி கண்டவர்கள்

     சிவன்

சிறப்புக்கள்

     1. இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர்
சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன். தலைப்பிலிட்ட பாடலில்
நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் எடுத்தாண்டுள்ளார்.

     2. இன்றும் இந்தச் சிற்றாறு ஒரு சிறு நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரம்மாண்டமான கட்டிடமாக ஒரு காலத்தில் இத்தலம் இருந்திருக்க வேண்டும்.
தற்போது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

     3. கோவிலின் சுற்றுப்பிரகாரங்களில் வர்ணம் கலந்த தீபங்கள்
அகல்விளக்கு போல வரிசை வரிசையாக அமைந்துள்ள காட்சி காண்பதற்கு
பேரழகு வாய்ந்தது.

     4. நம்மாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.