பக்கம் எண் :

425

72. திருப்புலியூர் (குட்டநாடு)

     அன்றி மற்றோர் உபாயமென், இவளந்தண்துழாய் கமழ்தல்
     குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கி
     தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்
     நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே (3545)
                               திருவாய்மொழி 8-9-10

     மாபெரும் மணிகள் பதிக்கப்பட்டு குன்றம் போல் உயர்ந்தோங்கும்
மாளிகைகளின் நடுவில் எந்நேரமும் பக்தர்களின் கூட்டம் நிறைந்திருக்க
தென்திசைக்கு திலகம் போல் விளங்கும் குட்டநாட்டுத் திருப்புலியூரில் துளசி
மாலையின் மனம் கமழ நின்றிருக்கும் மாயப்பிரானுக்கு என் உள்ளம் நேர்
படுவதைத் தவிர இதற்கு வேறு என்ன வழி இருக்கக்கூடும் என்று
நம்மாழ்வாரால் திருப்பாசுரம் பெற்ற இந்த திவ்யஸ்தலம் செங்கண்ணூரிலிருந்து
மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

     செங்கண்ணூரில் இருந்து புலியூருக்கும், புலியூரைத் தாண்டிச் செல்லும்
ஊர்களுக்கும் அடிக்கடி பேருந்துகளும், நகரப்பேருந்துகளும் உண்டு. புலியூர்
என்றால்தான் இங்குள்ள மக்களுக்குப் புரியும்.

     நகரத்துப் பாணியை நோக்கி வளர்ந்து வரக்கூடிய பெரிய கிராமமாக
இது திகழ்கிறது. 108 திவ்ய தேசங்களில் புலி என்ற அடை மொழியைக்
கொண்டு திகழும் திவ்ய தேசங்கள் இரண்டு ஒன்று சோழநாட்டில் உள்ள
சிறுபுலியூர் மற்றொன்று இதுவாகும்.

வரலாறு.

     ஒரு சமயம் மன்னன் சிபியின் மைந்தன் அரசாண்டு வரும்பொழுது
அவனுக்கு கடுமையான நோயும், நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அச்சமயம் அந்நாட்டிற்கு வருகை தந்த சப்தரிஷிகளை வேண்டிய மன்னன்
தனக்கும் தன் நாட்டிற்கும் உண்டான பேராபத்தைப் போக்கினால்தான்
முனிவர்கட்குத் தானம் கொடுப்பதாகக் கூறினான். தானம் என்ற
சொல்லைக்கேட்டு சினந்த ரிஷிகள் மன்னர்களிடம் முனிவர்கள் யாதொரு
தானமும் பெறக்கூடாது. அதிலும் உன் போன்ற மன்னர்களிடம் பெறுதல்
பெரிய பாவமென்று சப்தரிஷிகள் மறுத்துவிட்டனர்.