பக்கம் எண் :

426

     இருப்பினும் சிபியின் மைந்தனான வ்ருஷாதர்பி மந்திரிகள் மூலமாக
மறைமுகமாக தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைக்க அதையும்
முனிவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் வெகுண்ட மன்னன் ஒரு யாகத்தைச்
செய்து அந்த யாகத்தில் தோன்றிய தேவதையை சப்தரிஷிகளைக்
கொல்வதற்காக ஏவினான்.

     ரிஷிகள் மஹாவிஷ்ணுவைத் துதித்து நிற்க, அம்மாத்திரத்திலேயே
மஹாவிஷ்ணு இந்திரனை அனுப்பி இந்திரன் புலியாக மாறி தேவதையைக்
கடித்துக் குதறினான். இதனால் திருப்புலியூராயிற்று என்பர்.

     ரிஷிகள் திருமால் ஒருவன்தான் பரம்பொருள் என்று இவ்விடத்து
நிர்ணயம் செய்ததால் திருமால் அவர்கட்கு மாயப் பிரானாகக் காட்சி
கொடுத்து மோட்சமளித்தார்.

மூலவர்

     மாயப் பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     பொற்கொடி நாச்சியார்

தீர்த்தம்

     ப்ரஞ்ஞா ஸரஸ்

விமானம்

     புருஷோத்தம விமானம்

காட்சி கண்டவர்கள்

     சப்த ரிஷிகள்

சிறப்புக்கள்

     1. பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது.
இவ்விடத்திலிருந்து பீமனும் திருமாலைக்குறித்து தவம் புரிந்தான். பீமனைப்
போன்றே அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பைக் கொண்டுத்
திகழ்கிறது இத்தலம். இப்பகுதியில் வாழும் சற்று விஷயமறிந்த பெரியவர்கள்
இதனை பீமஷேத்ரம் என்றே கூறுகின்றனர்.

     2. இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள உயர்ந்த கொடிமரம்
(துவஜஸ்தம்பம்) வட்டவடிவமான (மூலஸ்தானம்) கருவறை அமைப்பும் மிக்க
எழில் வாய்ந்ததாகும்.